மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 நவ 2017

உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் ஆஜர்!

உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் ஆஜர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் மொத்த விற்பனை அங்காடி கட்டுவதற்கு அரசின் சார்பில் 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலத்தைக் கட்டடம் கட்ட பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உரிய காரணங்களுக்காக நிலத்தை பயன்படுத்தாததால் திரும்ப ஒப்படைக்கக் கோரி நிலத்தை அளித்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை திருப்பியளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

ஆனாலும் அரசு நிலத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை, இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் தலைமை செயலாளர் ஆஜராகாததால், கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இன்று (நவம்பர் 7) ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதித் துறை முன்னாள் செயலாளர் தர்மேந்திர பிரதான், தற்போதைய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜரானது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செவ்வாய், 7 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon