மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 நவ 2017

வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள்!

வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள்!

ஹில்ஸா மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வங்கதேசத்தின் விலை நிர்ணயத்தால் மேற்குவங்க அரசு ஹில்ஸா மீன்களுக்கு விலை நிர்ணயிப்பதிலும் தோல்வியே கண்டுள்ளது.

அரசு சாராத சர்வதேச நீர் சங்கம் (ஐ.டபுள்யூ.ஏ) இதுகுறித்து மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒப்பிட்டு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் கடந்த முப்பதாண்டுகளில் ஹில்ஸா மீன்பிடித் தொழில் மிகவும் குறைந்துள்ளது. அதிகமான ஹில்ஸா மீனை முந்தைய காலங்களில் பிடித்தனர். பின்னர் ஆற்றுப் படுகையில் வண்டல் மண் படிந்து, நீரோட்டம் குறைந்ததால் இந்த வகை மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேச அரசு ஹில்ஸா மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இனப்பெருக்கக் காலத்தில் ஹில்ஸா மீன் பிடிக்கத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடைகளுக்குப் பின்னர், ஹில்ஸா மீன் உற்பத்தியாகும் பகுதிகள் எனக் கண்டறிந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் மீன் பிடிக்கத் தடை என்ற தற்காலிக அறிவிப்பையும் வெளியிட்டது.

அதேபோல மேற்குவங்க அரசு ஹில்ஸா மீன்களைப் பிடிக்க அவற்றின் இனப்பெருக்கக் காலங்களில் தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் ஹில்ஸா மீன் உற்பத்தியில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச டெல்டா பகுதிகள், கடலோரப் பகுதிகளில் ஹில்ஸா மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் அந்தப் பகுதிகளில் பாரம்பர்யமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளது. இந்த மீன்பிடித் தொழிலைச் சார்ந்து அப்பகுதிகளில் சுமார் 50 லட்சம் பேர் வாழ்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

“வங்கதேச மற்றும் மேற்குவங்க அரசுகளின் இந்த நடவடிக்கை மீனவர்களைப் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்துள்ளது” என்று ஐ.டபுள்யூ.ஏ.வைச் சேர்ந்த சுஸ்மிதா மண்டல் கூறுகிறார்.

செவ்வாய், 7 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon