மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ராமானுஜரின் கோபம்!

  ராமானுஜரின் கோபம்!

விளம்பரம்

அனைத்துக்கும் காரணம் ராமானுஜர்தான் என்று அனலாய் கொதித்த சமணர்கள் ராமானுஜரைத் தேடி தொண்டனூருக்குப் புறப்பட்டனர். ஒருவர் இருவர் அல்ல... எண்ணிக்கையை துல்லியமாய் சொல்லியிருக்கிறார்கள் குருபரம்பரை ஆச்சாரியர்கள்.

சுமார் 12 ஆயிரம் சமணர்கள் சேர்ந்து ராமானுஜரோடு வாதப் போர் நிகழ்த்த வந்ததாக திகைக்க வைக்கும் குறிப்புகள் குரும்பரம்பரை பிரபாவங்களில் இருக்கின்றன.

குருபரம்பரையை மேற்கோள் காட்டி வைணவ ஆராய்ச்சியாளரான திருச்சிராப்பள்ளி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சாரியார் அவர்களும் 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அந்தக் காட்சியைக் காண்போம்.

பிட்டிதேவனை விஷ்ணுவர்தனன் ஆக்கிவிட்டு தொண்டனூருக்கு நிம்மதியாகத் திரும்பிய ராமானுஜர் வடுகநம்பிகளிடமும், தொண்டனூர் நம்பிகளிடமும் , ‘மன்னன் பிரம்மாண்டமான வைணவ கோயில்களை கட்டுவதாக வாக்களித்திருக்கிறான். எங்கே கட்டுவது என்றெல்லாம் ஆலோசனைகளை நாமும் வழங்கலாம். அதுபற்றி தகவல் சேகரித்து சொல்லுங்கள்’ என்று கூறிவிட்டு... பின் வழக்கம்போல தமது சீடர்களுக்கு வியாக்யானம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில்தான்... திமுதிமுவென ராமானுஜரை நோக்கி சமணர்கள் திரண்டார்கள். தொண்டனூர் நம்பி இதைக் கண்டு, அவர்களிடம் விசாரிக்க, ’‘ராமானுஜரைப் பார்க்க வேண்டும். வசியம் வைத்து ராஜாவின் மகளை குணப்படுத்திவிட்டு அதற்கு பதிலாக மன்னனையே வைணவராக மாற்றுவதா?” என்று கேள்வி கேட்டனர்.

இதை நம்பி ராமானுஜருக்கு கொண்டு செல்ல ராமானுஜரே வெளியே வந்தார். இப்போதே தொண்டனூர் பரந்துவிரிந்திருக்கும். அப்போது கேட்கவா வேண்டும்?

வெளியே வந்த ராமானுஜரை சமண குருமார்கள் அக்னிக் கண்களால் அளந்தனர்.

‘என்ன ராமானுஜரே... மன்னன் பிட்டிதேவன் எங்கள் சிஷ்யன். எங்கள் சிஷ்யனை மயக்கி உம்முடைய சிஷ்யனாக்கிக் கொள்ள வேண்டுமானால் முதலில் எங்களை ஜெயிக்க வேண்டும். எங்களோடு வாதாடி ஜெயித்தீர்கள் என்றால்தான் நீர் நிஜமான வெற்றியாளர். என்ன தயாரா?” என்று கர்ஜித்தனர்.

ராமானுஜருக்கு எங்கேயும் எப்போதும் கோபம் வந்ததே இல்லை. முனிவனுக்கு கோபம் வந்தால் அது சாபம் ஆகும். அந்த சாபம் யாரையேனும் அழிக்கும். அதனால்தான் முனிவர்கள் கோபத்தையும் துறக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இலக்கணம். ஆனால் இதற்கு மாறாக சில துறவிகள் கோபத்தை மட்டும் துறக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் கோபம் சாபம் ஆகி, தீமைகளை பிரசவிக்கும்.

ராமானுஜர் யதிகளுக்கெல்லாம் ராஜர். அப்படியானவர் மற்ற யதிகளுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால் அவர் எங்கும் கோபப்பட்டதாக சரித்திரம் இல்லை. முரண்பாடான கொள்கை கொண்டாரோடு கருத்து ரீதியாக மோதுவாரே தவிர, தனி மனுஷ குரோதமோ, விரோதமோ ராமானுஜரிடத்தில் இருந்ததே இல்லை.

அப்படிப்பட்ட ராமானுஜரே அன்று கோபப்பட்டுவிட்டார்.

ஆம்... சமண குருமார்கள் 12 ஆயிரம் பேரோடு தனித்தனியாக வாதாட முடியுமா?

ராமானுஜர் முடிவு செய்துவிட்டார்.

அன்று என்ன நடந்தது என்பதை தொண்டனூரில் இருக்கும் நம்பிநாராயணர் கோயில் ஸ்தலபுராணம் சொல்கிறது.

’’எங்களுடன் வாதாடி வெல்லத் தயாரா? என்று உடையவரை அழைத்தனர். உடையவரும் சவாலை ஏற்றார். அதன்படி, 12 ஆயிரம் சமணர்கள் சூழ்ந்திருக்க, அவர்களுக்கும் தனக்கும் இடையே திரைச்சீலைக் கட்டும்படி பணித்தார். திரையும் கட்டப்பட்டது. திரைக்கு பின்னால், ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக உருவடுத்த உடையவர். வாதத்தில், 12 ஆயிரம் சமணர்களையும் வென்றார்’’ என்கிறது தல வரலாறு.

இதைக் கேட்டால் புராணக் கதை போலத் தெரியலாம். ஆனால் ராமானுஜர் ஆதிசேஷனின் வடிவம் என்பதே வைணவத்தின் நம்பிக்கை.

தொண்டனூரில் தன்னை எதிர்க்க வந்த சமணர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு வேட்டியை அல்ல பல வேட்டிகளை நீளவாக்கில் கட்டச் சொன்னார் ராமானுஜர்.

ஏனென்றால் முகம் பார்த்துப் பார்த்து பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சொல்ல முடியாது என்று கருதினார். அதனால் வேட்டிக்கு அந்தப் பக்கம் நின்று ஆயிரக்கணக்கான சமணர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் வாயடைக்கும்படியாக பதில்களை ராமானுஜர் உரைத்தார் என்பதே வரலாறு.

இதில் சில புனைவுகள் இருக்கலாம்,. ஆனால் புனைவுகளும் பொருத்தமான அடிப்படைத் தகவல்களின் அடிப்படையிலேயே கட்டப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

அந்த அடிப்படையில் ராமானுஜர் 12 ஆயிரம் சமணர்களையும் வாதத்தில் வென்று அவர்களை வைணவர்கள் ஆக்கினார் என்பது ஒரு தகவல். இன்னொரு பக்கம்... ராமானுஜரை ஏசிவிட்டோமே என்று அங்கிருந்த சமணர்களில் பலர் ராமானுஜரிடம் சரண் அடைய, இன்னும் சிலரோ அங்கேயே தங்களது அறியாமையை வெட்கி உயிரையே விட்டதாகவும் தகவல் குறிப்புகள் இருக்கின்றன.

ஆக... ராமானுஜர் அப்போது சமண சாம்ராஜ்யத்தை வைணவக் கோட்டையாக மாற்றினார்.

அடுத்து?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன்... ராமானுஜ மேகங்கள் வைணவ மழைத்துளிகளை பூமிக்குத் தருவது போல சளைக்காமல் சலிக்காமல் தொடர்ந்து வைணவப் பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். அவரது நாவில் நடனமாடும் பாசுரங்கள் பல்வேறு மேடைகள் வழியாக பரவலாக்கம் பெறுகின்றன.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon