மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்?

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை  மாற்றம்?

எடப்பாடி திடீர் திட்டம்!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். மழை ஓயாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.

“தமிழகம் முழுக்க பயணம் கிளம்புவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறார் ஸ்டாலின். காரணம், மழை. இதை நாம் முன்பே டிஜிட்டல் திண்ணையில் சொல்லியும் இருந்தோம். இப்போது தினமும் அவரது தொகுதியான கொளத்தூருக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றி வர ஆரம்பித்துவிட்டார். திருச்சிக்கும் போனவர் அங்கே, ஏரிகள் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். அங்கிருக்கும் மக்களுடன் பேசினார்.

‘தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப் பயணம் கிளம்புறதுக்கு முன்பு இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே...’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினின் இந்த விசிட் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியவர்கள், ‘மழைக்காக நாம எதுவுமே செய்யலை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டிட்டு இருக்காரு. இது மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கி இருக்கு. அவரோட தொகுதியான கொளத்தூருக்குப் போய் ரோட்டுல இறங்கி நின்னு கேமராவுக்கு போஸ் கொடுத்துட்டு வந்துடுறாரு. அவரு பேசுறதை மக்கள் யாரும் ரசிக்கவே இல்லை...’ எனச் சொல்லி இருக்கிறார்கள். ‘அப்படியா...’ என ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறார் எடப்பாடி.

ஆனால், ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களோ, ‘மழை நேரத்துல நீங்க வீதிக்கு வந்து மக்களோடு நிற்பது நல்ல முயற்சி. இது மக்களிடம் உங்களுக்கு நல்ல பெயரை உண்டாக்கி இருக்கு....’ என்று சொன்னார்களாம். ஸ்டாலினோ, ‘எது எப்படியோ நாம செய்யுறதை செஞ்சுட்டே இருப்போம்...’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லியிருக்கிறார்” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

“இரட்டை இலை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்தது. தீர்ப்பு இன்றே கிடைத்துவிடுமென்று முதல்வர் காத்திருந்தார். ஆனால் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய விசாரணையின்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் சுமார் மூன்று மணி நேரம் வாதாடினார். மாலை ஐந்தரை மணிக்கும் மேல் அவர் வாதாடிய நிலையில் வழக்கை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். தினகரன் தரப்பு வாதம் முடிந்து, அடுத்து எடப்பாடி - ஓ.பன்னீர் தரப்பின் இறுதி வாதமும் முடிந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இரட்டை இலைச் சின்னம் எப்படியும் தங்களுக்குக் கிடைத்துவிடும் எனப் பெரிதும் நம்புகிறார் எடப்பாடி. அப்படிச் சின்னம் கிடைத்துவிட்டால், முதல் வேலையாகக் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் சில மாற்றங்களைச் செய்ய எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். கட்சிக்குள் செயல்படாமல் இருக்கும் சிலரை மாற்றம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். ஆட்சியைப் பொறுத்தவரை மாற்றத்துக்கான 8 அமைச்சர்கள் பட்டியல் எடப்பாடி கையில் இருக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அந்த 8 பேரில் அடக்கம். இந்த 8 பேரால்தான் ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது என அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்ட ரிப்போர்ட் எடப்பாடி கையில் இருக்கிறதாம்.

அது மட்டுமல்லாமல், இந்த 8 பேருமே சசிகலா குடும்பத்துடன் மறைமுகமாகத் தொடர்பில் இருக்கும் தகவல்களும் உளவுத் துறை மூலமாக எடப்பாடிக்குப் போயிருக்கிறது. அதை ஒன்றுக்கு இரண்டு முறையாகக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாராம் எடப்பாடி. ‘இந்த மாதிரி ஆட்களைக் கூட வெச்சுகிட்டு எப்படி கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியும்? இவங்க செய்யுற கோமாளித்தனத்துக்கெல்லாம் எல்லோரும் என்னைத் திட்டுறாங்க. அதனால இவங்களை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கணும். புதிதாக யாரையெல்லாம் அமைச்சரவையில் சேர்க்கணும் என்பதைப் பேசி முடிவெடுக்கலாம்...’ என எடப்பாடியே வாய்விட்டுச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். அந்தக் கணக்குப்படி பார்த்தால், இலை கிடைத்தால், அமைச்சரவை மாற்றம் உறுதி!” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 1 நவ 2017

அடுத்ததுchevronRight icon