மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சிறுமிகள் பலி: மின் வாரிய ஊழியர்கள் நீக்கம்!

சிறுமிகள் பலி: மின் வாரிய ஊழியர்கள் நீக்கம்!

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக 8 மின் வாரிய ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில், சகோதரிகளான யுவஸ்ரீ (10), பாவனா (11) ஆகிய இருவரும் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் சிறுமிகளின் பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சிறுமிகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையைகளையும் இன்றே வழங்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரக் கம்பி நீண்ட நாட்களாக அறுந்து கிடப்பதாகவும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின் வாரிய அதிகாரிகளிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

தலைக்கு மேல் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கொடுங்கையூர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. இருப்பினும் இந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை எனவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.

அலட்சியப் போக்கில் செயல்பட்ட வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு மின் வாரியம் சார்பாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இந்தச் சம்பவம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் மின் பாதிப்பு குறித்து 5 பேர் கொண்ட குழு சென்னை முழுவதும் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், “கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அரசு அனுதாபமும் நிதியுதவியும் செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவனவெல்லாம் செய்ய வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon