மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

காலியான பாதையில் புல்லெட் ரயில்!

காலியான பாதையில் புல்லெட் ரயில்!

இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் 40 சதவிகித இருக்கைகள் காலியாகவே இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே துறை பதில் அளித்துள்ளது.

இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்திற்குக் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்ஷோ ஏப் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர். இத்திட்டத்திற்கு ரூ.1,10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.98,000 கோடி ஜப்பானிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாத காலத்தில் மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் பயணித்த பயணிகள் குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு இந்திய ரயில்வே அளித்துள்ள பதிலில், “கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் அகமதாபாத் முதல் மும்பை வரையிலான பாதையில் 40 சதவிகித இருக்கைகள் காலியாகவே இருந்தன” என்று கூறியுள்ளது.

40 சதவிகித இருக்கைகள் காலியாகவே இருக்கும் பாதையில் புல்லெட் ரயில் விடப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மும்பை - அகமதாபாத் வரை பயணிக்கும் இந்த புல்லெட் ரயில் 508 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரங்களில் கடக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 323 கிலோ மீட்டர். இதற்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்குகவிருக்கின்றன.

ரயில்வே துறைக்கான மூலதன முதலீடு இந்த ஆண்டு ரூ.1,31,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.55,000 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon