மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

பிறந்தது ‘தன்னாட்சித் தமிழகம்’!

பிறந்தது ‘தன்னாட்சித் தமிழகம்’!

தமிழக உரிமைகளுக்காகப் போராடத் தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான இன்று (நவம்பர் 1) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டியக்கத்தின் முதன்மைக் கோரிக்கைகளாக, ‘தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவான நவம்பர் முதல் தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்’ ஆகியவை முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தன்னாட்சித் தமிழகம் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், ஸ்டாலின் சமதர்மன் (மக்கள் இணையம்) துரை.தங்கபாண்டியன், செல்வி (சோஷலிச மையம்), அருள்தாஸ் (பச்சைத் தமிழகம்), அறிவுச்செல்வன் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி), மாணவர் அமைப்புச் செயல்பாட்டாளர் செம்பியன் உள்ளிட்டோர் இந்த கூட்டியக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

எதற்காக இந்தக் கூட்டியக்கம் என்று அதன் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான ஆழி செந்தில்நாதனிடம் கேட்டோம்.

“தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் பல இயக்கங்கள் போராடிவருகின்றன. நீட், சல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஜிஎஸ்டி மூலமாக மாநில வரிவருவாய் இழப்பு, இந்தித் திணிப்பு, இலங்கைத் தமிழர் படுகொலை, மீனவர் படுகொலைகள், உள்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல், காவிரி மேலாண்மை வாரியம், பாலாறு, முல்லைப் பெரியாறு சிக்கல், கீழடி தொல்லியல் அகழாய்வு, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோதல், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்று தொடர்ச்சியான போராட்டங்களால் தமிழகம் கொந்தளித்துப்போயிருக்கின்றது.

தனித்தனியான போராட்டங்களாக இவை தோன்றினாலும், இந்த எல்லாப் போராட்டங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, தமிழகம் தனக்கான அரசு உரிமைகளை இழந்திருப்பதே ஆகும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டியக்கமாகப் போராட முன்வந்திருக்கிறோம்” என்றார் திட்டவட்டமாக.

’மத்தியில் கூட்டாசி மாநிலத்தில் சுயாட்சி’ என்று அரசியல் கட்சிகள் நெடுங்காலமாகக் கூறிவரும் நிலையில் எந்த வகையில் நீங்கள் வேறுபடுகிறீர்கள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

“தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கத்தின் முதன்மையான குறிக்கோள் இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து தமிழ்நாட்டின் மாநிலத் தன்னாட்சியை (STATE AUTONOMY) வென்றெடுப்பதே. மத்திய அரசு உண்மையான கூட்டாட்சியாக (FEDERATION) இருக்க வேண்டும், மாநிலங்கள் தன்னாட்சி பெற்றவையாக இருக்கவேண்டும் . அதுவே இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான சிறந்த வழி. இதை மக்கள் மன்றத்தில் நிலைநிறுத்துவதே எம் கூட்டியக்கத்தின் குறிக்கோள்’’ என்றார் ஆழி செந்தில்நாதன்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon