மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஏரியில் திருமணம்!

ஏரியில் திருமணம்!

ஆடம்பரமான திருமணம் என்பது இப்போதெல்லாம் சகஜமாகிவருவருகிறது. பணத்தை வாரி இறைத்து , நகை, அலங்காரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனத் திருமணங்கள் மிகவும் செலவுபிடிக்கும் சங்கதியாக மாறிவருகின்றன. இந்தப் பின்னணியில் இயற்கையைப் போற்றும் வகையில் ஏரியையே மணமேடையாக பயன்படுத்தி இன்று (நவம்பர் 01) நடைபெற்ற திருமணம் கவனம் ஈர்க்கிறது.

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியில் அரவிந்த்-பூவிழி என்ற இணையரின் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்களுடன் இதில் திரைப்பட இயக்குநர்கள் பாலாஜிசக்திவேல், ராஜுமுருகன் ஆகியோரும் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.

இயற்கையைப் போற்றும் வகையில் ஏரிப் பகுதியில் மிக எளிமையாகத் திருமணம்

செய்துகொள்வதற்கான உத்வேகத்தை சமூகச் செயல்பாட்டாளரும் இயற்கை ஆர்வலருமான பியூஸ் மானஸின் சேலம் மக்கள் குழுவிலிருந்து பெற்றதாக மணமகன் அரவிந்த் கூறினார்.

''கடந்த 5 ஆண்டுகளாக இந்த அமைப்பில் இருக்கிறேன். இயற்கைமீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு அதிகம். அதனால், இயற்கையோடு இணைந்து எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசைப்பட்டேன். தண்ணீர் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் இந்த ஏரிக்குள் பரிசலில் வந்து, தீவு போல இருக்கும் இந்தத் திட்டில் எங்கள் திருமணம் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் அரவிந்த்.

''எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையோடு வாழ வேண்டும். அரவிந்த் -பூவிழி இருவரும் இயற்கையின் முன்னிலையில் இணைந்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிகள் இயற்கையைப் போல நீடூழி வாழ வேண்டும்'' என்றார் காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

ஜோக்கர் பட இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, ''சொல்லைவிடச் செயல் சிறந்தது. செய்துகாட்டியிருக்கும் இவர்கள் சிறந்தவர்கள். இந்தத் திருமணம், எளிமையாகவும் ஏகாந்தமாகவும் நடைபெற்றுள்ளது'' என்று கூறினார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon