மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

திமுக வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

திமுக வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப் பதியாமல், தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அத்தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று (நவ.1) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால், தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று கூறி, வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும்வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையொட்டி அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனிடையே, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஓட்டுக்காகப் பணம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், இடைத் தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon