மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

கந்து வட்டி: தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

கந்து வட்டிக்கு எதிரான வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு தீக்குளித்து உயிரிழந்தது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கந்து வட்டி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனகவேல் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “அரசிடம் அனுமதி பெறாமல் வட்டிக்குக் கடன் வழங்குவதைத் தடுக்க வேண்டும். கடனுக்கு எத்தனை சதவிகிதம் வட்டி வசூலிக்கலாம் என்பதையும் அரசே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். கந்து வட்டி புகாரை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (நவம்பர் 1) நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கந்து வட்டி வசூலிப்பது தொடர்பான புகார்களை விசாரிக்கத் தனிக் குழு அமைப்பது குறித்துத் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக கந்து வட்டிக் கொடுமையால் நான்கு பேர் தீக்குளித்தது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon