மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்!

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்!

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மொபைல் ஆப், ஏ.டி.எம். மையங்கள், வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் செலுத்தும் வசதிகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கு, மின் கட்டண வசூல் மையங்களுக்கு விற்பனை நிலையக் கருவி (பி.ஏ.எஸ்.) வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாகச் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டம், மயிலாப்பூர் கோட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நேற்று (அக்டோபர் 31) இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து பிரிவுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மக்கள் கிரெடிட்,டெபிட் கார்டு மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.

வங்கிகளில் கார்டு பயன்படுத்தும்போது அதற்குச் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது சேவைக் கட்டணமாக டெபிட் கார்டுக்கு,0.75 சதவிகிதமும், கிரெடிட் கார்டுக்கு 1.25 சதவிகிதமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும்போது, வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தமிழகத்தில் தற்போது எங்கும் மின் தடை இல்லை என்றார். மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் பேசிப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மின் உற்பத்தி தேவையான அளவு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon