மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

காலி ஐ.ஏ.எஸ். பணியிடங்களை நிரப்புக!

காலி ஐ.ஏ.எஸ். பணியிடங்களை நிரப்புக!

தமிழகத்தில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (நவம்பர் 1) அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''வடகிழக்குப் பருவமழையினால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பல பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தினால் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், வீடுகளுக்குத் திரும்ப முடியாமலும் தவித்துவருகிறார்கள்” எனக் கூறிய ஸ்டாலின், நிர்வாகத்தின் ஆணிவேராகத் திகழும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு காலியாக இருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.

மழை நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ, அமெரிக்காவைப் போல் நிவாரணப் பணிகள் நடக்கின்றன என்று கூச்சமே இல்லாமல் மக்களின் துயரத்தை ‘நகைச்சுவை’ என்று எண்ணிப் பேசிக்கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ள அவர், ‘மழை நீர் வடியவில்லை’ என்று கூறிய நிருபரை மிரட்டிய அமைச்சரின் செயலைக் கண்டித்துள்ளார்.

“சர்க்கரை விலையை 25 ரூபாயாக உயர்த்தியதால் பாதிப்பு இல்லை" என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும். “டெங்கு காய்ச்சலுக்கு எய்ம்ஸ் நிபுணர் குழு அனுப்பக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் மக்களின் துயரத்தை வேடிக்கையாகக் கருதி பேசிவருவதாகச் சாடியுள்ள ஸ்டாலின், மக்களுக்காகச் செயல்பட வேண்டிய நிர்வாகம், குறிப்பாக இந்திய ஆட்சிப் பணி நிர்வாகம் சீர்குலைந்து நிற்பதாக விமர்சித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவிகளில் ஏறக்குறைய 76க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன எனத் தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். “தமிழகத்தில் மொத்தமுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இதுவரை 35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு சென்றுவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கைநீட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பமிட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்க முடியாத அதிகாரிகளும், தமிழகத்தில் பணியாற்ற முடியாது என்று கருதி, மத்திய அரசுப் பணிக்குச் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எஞ்சியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் திறமையான பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு "டம்மி போஸ்டிங்" கொடுத்து, அவர்களின் திறமையை வீணடிக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் நலனுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேர்மையுடனும், துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால், இப்போது ஒரே நாள் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதில் தடுத்திருக்க முடியும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி என்ற முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க திமுக தயாராக உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon