மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

50 % இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்!

50 % இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள்!

கடந்த ஆண்டில் அரசாங்கத்தின் பிரதான சலுகைகளைப் பெறுவதற்குப் பத்தில் ஐந்து பேர் லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதில், எட்டுப் பேர் போலீஸ், நகராட்சி அலுவலர்கள் மற்றும் சொத்து பதிவு தொடர்பான விஷயங்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர் என LocalCircles என்னும் அமைப்பு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு சமூகங்கள், அரசு நிர்வாகம், நகர்ப்புற அன்றாட வாழ்வு ஆகியவை குறித்த செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக ஊடகம்.

ஊழல் குறித்து நாடு முழுவதும் உள்ள 200 நகரங்களில் ஆன்லைன் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அதில், 25 சதவிகிதம் பேர் பல முறையும், 20 சதவிகிதம் பேர் ஒன்று அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்துள்ளனர். 84 சதவிகிதம் பேர் உள்ளூர் நிர்வாகத்திற்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். பி.எப்., வருமான வரி, சேவை வரி, ரயில்வே மற்றும் டெண்டர் தொடர்பான பணிகளுக்காக 9 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். வேலை செய்ய லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என மூன்றில் ஒருவரும், லஞ்சம் கொடுப்பதால், வேலை விரைவாக நடப்பதாக 2 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

ஊழலை ஒழிக்க அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ஊழலை ஒழிக்க மாநில அல்லது மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 50 சதவிகிதம் பேரும், ஊழலை ஒழிக்கச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; ஆனால், அது பலனளிக்கவில்லை என்று 42 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். 9 சதவிகிதம் பேர் மட்டும் அரசு வேகமாக இயங்குவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் என்பது இந்திய யதார்த்தம் என்பதை இந்த ஆய்வு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. ஆய்வின் விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்:

https://m-www.localcircles.com/a/press/page/corruptionpoll2016#.WfnFjo-CyUk

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon