மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

காவலர்களை கவனியுங்கள்!

காவலர்களை கவனியுங்கள்!

முதல்வர் இருக்கையில் அமர்பவர் யாராக இருந்தாலும் சரி... முதல்வர் காலையில் வருகிறார் என்றால் அப்பகுதியில் இரவில் இருந்தே பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் நிறுத்தப்படுவார்கள். அதுவும் பரிணாம வளர்ச்சி அடைந்து முதல்வர் வரும் சாலை ஓரம் முழுதும் போலீஸ் தலைகளாக நிறுத்தப்பட்டு பாதுகாப்பு என்பது பந்தா என்பதாக வளர்ந்திருக்கிறது.

இத்தகைய அரசியல் சூழலில், போலீஸார் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதன் முதலில் நமது மின்னம்பலம். காம மொபைல் பத்திரிகையில் செய்தி வெளியிட்டோம். இதைத் தொடர்ந்து மற்ற ஊடகங்களும் இதுபற்றிச் செய்தி வெளியிட, இன்று (நவம்பர் 1) பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி எம்.பி., இப்பிரச்னையை கையிலெடுத்து தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், மற்ற அரசுத் துறைகளில் பணியாற்றும் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பயன்கள், வரையறுக்கப்பட்ட பணி நேரம், வார விடுப்பு, கூடுதல் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், பதவி உயர்வு, படிகள் உயர்வு, மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்தல், உயரதிகாரிகளின் வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் ஆர்டர்லி முறையை ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையிலும் ஒழித்தல், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக வழங்குதல், காவலர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

போலீஸாரின் இந்த குறைபாடுகளைப் பட்டியலிட்டுள்ள அன்புமணி,

’’தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்பாக ஜூலை 4-ஆம் தேதி காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். தமிழக அரசு செவிமடுக்கவில்லை. புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒருபுறமிருக்க... 2013-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, காவலர்களுக்கான உணவுப்படி சென்னைக் காவல்துறையினருக்கு ரூ.200 ஆகவும், மற்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு ரூ.150 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை மாநகரக் காவலர்களுக்கு உணவுப்படியாக மாதம் ரூ.5200 வழங்கப்படும் நிலையில், மற்ற மாவட்டங்களில் ரூ.800 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்?

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு காவல்துறையினரின் பணிச்சுமை பல மடங்கு அதிகரித்து விட்டது. வெளியூர் விழாக்களில் கலந்து கொண்டு நள்ளிரவில் அவர் சென்னை திரும்பினால் கூட மாநகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்படுகின்றனர். முதலமைச்சரின் பாதுகாப்பு என்ற பெயரில் தாங்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறோம் என்பது குறித்து நூற்றுக்கணக்கான காவலர்கள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். குறிப்பாக பெண் காவலர்கள் படும் அவதி கொடுமையானது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்... ‘’தமது பந்தாவுக்காகவும், விளம்பரத்திற்காகவும் காவலர்களை சுரண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கோரிக்கைகளை யோசிக்காமல் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாததால் காவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அது எந்த நேரமும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாக வெடிக்கும் ஆபத்துள்ளது. இதை உணர்ந்து காவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அன்புமணி.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon