மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

டெஸ்ட் வாய்ப்பைக் குறிவைக்கும் சிறுவன்!

டெஸ்ட் வாய்ப்பைக் குறிவைக்கும் சிறுவன்!

ரஞ்சிப் போட்டியில் ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் 17 வயதான ப்ரித்வி ஷா சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய முதல்தரப் போட்டிகள் வரலாற்றில் இளம் வயதில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் ப்ரித்வி ஷா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மும்பை - ஒடிசா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டி இன்று (நவம்பர் 1) தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ப்ரித்வி ஷா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 153 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது அவருடைய மூன்றாவது ரஞ்சி சதமாகும். மேலும் முதல்தரப் போட்டிகளில் இது அவரது நான்காவது சதமாகும்.

இதுவரை 18 வயதுக்கு முன்பு சச்சின் 7 முதல்தர சதங்கள் எடுத்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக 17 வயதான ப்ரித்வி ஷா உள்ளார். இதுவரை 5 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ள ப்ரித்வி ஷா (ரஞ்சி தொடரில் 2016ஆம் ஆண்டு தமிழக அணிக்கு எதிராக 120, துலீப் ட்ராபியில் இந்தியா ப்ளூ அணிக்கு எதிராக 154, 2017ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் தமிழக அணிக்கு எதிராக 123, தற்போது ஒடிசா அணிக்கு எதிராக 105) 4 சதங்களை விளாசியுள்ளார். இவர், வரும் நவம்பர் 9 அன்று 18 வயதை எட்டவுள்ளார். இளம் வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் முத்திரை பதித்துவரும் இந்தச் சிறுவன் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது.

18 வயதுக்கு முன்பு முதல்தர கிரிக்கெட் போட்டியில் சதமடித்தவர்கள் பட்டியல்:

* சச்சின் டெண்டுல்கர் - 7 சதம்

* அம்பாதி ராயுடு / ப்ரித்வி ஷா - 4 சதம்

* அங்கித் பாவ்னே- 3 சதம்

18 வயதுக்கு முன்பு ரஞ்சி தொடரில் சதமடித்தவர்கள் பட்டியல்:

* ப்ரித்வி ஷா - 3 சதம்

* அங்கித் பாவ்னே - 3 சதம்

* அம்பாதி ராயுடு - 3 சதம்

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon