மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ராமேஸ்வரம்: கட்டணமில்லா ரயில் பயணம்!

ராமேஸ்வரம்: கட்டணமில்லா ரயில் பயணம்!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று காலை (நவம்பர் 1) டிக்கெட் கொடுக்க ஆளில்லாததால் 2000 பயணிகள் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று இது. ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இந்தக் கோயிலில் வழிபட்டதாகவும், அங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்களும் அகலும் என்பதும் நம்பிக்கை. எனவே, ராமநாதசாமியை தரிசிக்க உள்ளூர் வெளியூர் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மதுரையிலிருந்து கிழக்கே 161 கி.மீ. தொலைவில் ராமநாதசாமி கோயில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், இன்று அதிகாலை 6 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் ரயில் மதுரைக்குப் புறப்படத் தயாரானது. 4.30 மணி அளவில் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வரத் தொடங்கினர். டிக்கெட் எடுக்கப் பயணிகள் டிக்கெட் கவுண்டருக்கு சென்றபோது , டிக்கெட் கவுண்டர் பூட்டியிருந்தது. டிக்கெட் கவுண்டரில் ரயில்வே ஊழியர் ரோஹித் வரவில்லை. பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தபோது, அவர் பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். பயணிகளும் பொறுமையாக காத்திருந்தனர். ஆனால், 4.30 மணிக்கு வர வேண்டிய ரோஹித் 5.30 மணி ஆகியும் வரவில்லை. பணிக்கு வராமல் இருப்பதற்கான காரணத்தையும் ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, ரயில்வே காவல் துறை அதிகாரிகள் பயணிகளைச் சமாதானம் செய்து ரயில் புறப்பட்டதும் அந்த ரயிலில் அவர்களை அனுப்பிவைத்தனர். பயணிகளும் டிக்கெட் எடுக்காமல் இலவசப் பயணத்தை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஊழியர் ரோஹித்திடம் ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது. நேற்று இரவு உடல்நிலை சரியில்லை என்றும் இன்று காலை 7.40 அளவில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தான் அனுமதிக்கப்பட்டதாக ரோஹித் தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் சக ஊழியர்கள் ரோஹித் மது அருந்திவிட்டுத் தூங்கியதால் பணிக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon