மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பாயாசம் அப்பம்: தொடங்கியது வேலை!

பாயாசம் அப்பம்: தொடங்கியது வேலை!

இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்காக திருவாங்கூர் தேவசம் போர்டு நேற்று (அக்டோபர் 31) அரவன பாயாசம், அப்பம் ஆகிய பிரசாதங்கள் தயாரிக்கும் பணியைத் தொடங்கியது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டலம் மற்றும் மகர விளக்கு சமயங்களில் பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு அரவன பிரசாதங்கள் வழங்கப்படும்.

நேற்று அரவன பாயாசம் மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கும் பணியை திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் கோபால கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நவம்பர் 15ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 2 லட்சம் கேன் அரவனா வீதம் மொத்தமாக 30 லட்சம் கேன் அரவன தயாரிக்கப்படும். இதன் மூலம் பிரசாதப் பற்றாக்குறை தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபத்தில் ஒரே நேரத்தில் 5,000 பக்தர்களுக்கு இடமளிக்க முடியும். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் தேவம்சம் போர்டு கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. ஏப்ரல் மாதம் நடக்கும் விஷ்ணு திருவிழாவின்போது, அன்னதான மண்டபத்துடன் நவீன சமையலறை இணைக்கப்பட்டுத் தயாராக இருக்கும் என திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலைச் சுற்றி பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 400 கி.மீ. பரப்பளவிற்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரை போக்குவரத்துக் கண்காணிப்பு நடைபெறும். இதற்காக 15 போலீசார் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் பயன்படுத்தும் பைக்குகளில் ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா, ஸ்பீட் ரேடார் ஆகிய அம்சங்கள் இருக்கும். இதன் மூலம் சபரிமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த கேரள அரசு சார்பில் ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon