மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

நேபாள இஞ்சிக்கு வரி விலக்கு!

நேபாள இஞ்சிக்கு வரி விலக்கு!

ஜி.எஸ்.டி. வரி எதுவும் இல்லாமல் இந்தியாவின் நிலப்பரப்புக்குள் இஞ்சியை ஏற்றுமதி செய்யலாம் என்றும் அதற்கு இந்தியா அனுமதியளிக்கும் என்றும் நேபாள வணிக அமைச்சகச் செயலாளர் தர்கராஜ் பத்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் இஞ்சிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையின் கீழ் 5 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வரியை நீக்கிக்கொள்ள இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இறக்குமதி வரி ஏதுமின்றி வணிகர்களும் விவசாயிகளும் இந்தியாவுக்கு இஞ்சியை ஏற்றுமதி செய்யலாம் என்றும் நேபாள வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், இறக்குமதி வரி விலக்குடன் இஞ்சி ஏற்றுமதி மேற்கொள்ள அரசாங்கத்திடமிருந்து தேவையான உரிமங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வணிகர்களுக்கு வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியச் சந்தைகளுக்கு நேபாளத்தின் விவசாய உற்பத்தியை வரி விலக்குடன் ஏற்றுமதி செய்ய ஏற்கனவே நேபாள - இந்திய வணிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து சிலிகுரியில் சுங்க வரி ஆணையரை நேபாள அதிகாரிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உலக அளவில் இஞ்சி உற்பத்தியில் நேபாளம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. நேபாளத்தின் இஞ்சி ஏற்றுமதியில் 94 சதவிகிதப் பங்குடன் இந்தியா முக்கிய இறக்குமதியாளராக உள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon