மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

மழை: சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

மழை: சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை!

மழையின் காரணமாகச் சென்னையில் சுமார் 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சரியான நேரத்தில் எடுக்கப்படாமல் நின்றன.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. முடிச்சூர், பல்லாவரம், பெரம்பூர், ஓட்டேரி, அண்ணாநகர், அம்பத்தூர் எஸ்டேட் சின்மயா நகர், கொரட்டூர், பட்டரவாக்கம் உள்படப் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அங்கு வசிக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அதிகாலையில் உடனே வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

அவர்களை அழைத்துச் செல்லும் மாநகரப் பேருந்துகளும் சரியான நேரத்துக்குச் செல்லாததால் டெப்போக்களில் பேருந்துகளைச் சரியான நேரத்துக்கு எடுக்க முடியவில்லை.

இதனால் தாம்பரம், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, குரோம்பேட்டை, அயனாவரம், வடபழனி, மந்தைவெளி டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படவில்லை.

3,300 பேருந்துகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் காலையில் ஓடாததால் மக்கள் பஸ்ஸுக்காக நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்தனர். அப்படியே பேருந்து வந்தாலும் பெரும்பாலான பேருந்துகளில் ஆங்காங்கே மழை நீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. இதனால் பணிக்குச் செல்வோர் சிரமப்பட்டனர். இதுபற்றி அயனாவரம் பேருந்து ஓட்டுநர் சேகர் கூறுகையில், எனது வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்கியதால் காலையிலேயே டெப்போவுக்கு செல்ல முடியவில்லை. மழை நீர் வடிந்த பிறகே வேலைக்குச் சென்றதாக தெரிவித்தார். இதே போல் புறநகர்ப் பகுதியிலும் காலையில் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon