மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

ஆதார் இல்லாமல் ஐ.டி. ரிட்டன் செலுத்தலாம்!

வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 139AA-இன் படி, வருமான வரி ரிட்டன் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்படாமல் அல்லது விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் தெரிவிக்கப்படாமல் இருந்தால் அது செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஆதாரைக் கட்டாயமாக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 31) சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்ய ஆதார் கட்டாயமல்ல என்று மனுதாரர் ஒருவருக்கு அனுமதியளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பிரீத்தி மோகன் என்ற பெண் தனது வழக்கறிஞர் சுரித் பார்த்தசாரதி உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆதார் எண் இல்லாதவர்கள் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யும்போது ஆதாரை எண்ணை இணைக்க இயலாது; எனவே அந்தக் கட்டுப்பாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அவர் வருமான வரி ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று செவ்வாய்க்கிழமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தீர்ப்பளித்துள்ளார்.

நீதிமன்ற ஆணைப் படிவம் பின்வருமாறு:

முன்னதாக ஆகஸ்ட் 4ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் சுகதன் என்பவர் தொடுத்த வழக்கில் அவர் வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயமல்ல என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஜூன் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் பினாய் விஸ்வான் என்பவர் தொடுத்த வழக்கில் அவரது வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon