மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

விஜய் பேனர் சரிந்து விபத்து!

விஜய் பேனர் சரிந்து விபத்து!

அனுமதி இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட விஜய் பட பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர்.

சென்னை திருப்போரூரில் மெர்சல் படத்தின் 28 அடி பேனர் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர் சரியாகப் பொருத்தப்படாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) அன்று திடீரெனச் சரிந்தது. அப்போது அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த காரின் மீது பேனர் விழுந்தது. இதனால் அந்த காரில் பயணம் செய்த தேவநாதன் என்பவர் பலத்த காயமடைந்தார். அவருடன் பயணித்த அவருடைய குடும்பத்தினருக்கும் காயம் ஏற்பட்டது. உயிருடன் இருப்பவர்களுக்குப் பேனர்கள் வைக்கத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த நாள் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட புகார் குறித்து செங்கல்பட்டு துணை ஆட்சியர் வி.பி.ஜெயசீலன், “அப்பகுதியில் பேனர் வைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த விஜய் ரசிகர் ஒருவர், “உயர் நீதிமன்ற அறிவிப்பு வெளிவந்ததும் பேனர்களை அகற்றக் கோரி விஜய் அவர்களிடம் இருந்து அனைத்து மன்றங்களுக்கும் பேனர்களை எடுக்கச்சொல்லித் தகவல் அனுப்பப்பட்டது. இந்த பகுதியில் பேனர் வைக்க எங்கள் தலைமை நிர்வாகிகள் அனுமதி வாங்கியுள்ளனர் என்று நினைத்து அகற்றாமல் விட்டுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சுற்றியுள்ள 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் பேனர் வைக்கச் சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். இதுவரையில் சுமார் 100க்கும் சற்று அதிகமான பேனர்கள் வைக்க மட்டுமே உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தவிதமான முன் அனுமதியுமின்றி வைக்கப்பட்ட விஜய் பேனர் தற்போது சரிந்து விழுந்ததையடுத்து அந்த பேனரை வைத்தது யார் என்று விசாரணை நடந்துவருவதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon