மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி,குழந்தை சிறையில் அடைப்பு!

ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி,குழந்தை சிறையில் அடைப்பு!

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடிக்க உதவிய ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி அவருடைய ஒரு வயதுக் குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் என்பவரை நேற்று முன்தினம் மத்திய உளவுத் துறை வழிகாட்டுதலின்படி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபீர் கரீமுக்கு உதவிய அவரது மனைவி ஜாய்ஸ் ஜோவையும் ஹைதராபாத் போலீசார் உதவியுடன் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து நேற்று (அக்டோபர் 31) இரவு விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் உதவி ஆணையர் சுப்பிரமணி விசாரணை நடத்தினார். “எனது கணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் ஆர்வக்கோளாறில் தவறு செய்துவிட்டேன்” என்று ஜாய்ஸ் ஜோ கூறியுள்ளார்.

இதையடுத்து அவரையும் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை இன்னும் தாய்ப்பால் குடிக்கும் பருவத்தைத் தாண்டவில்லை என்பதால் அவர் தன் குழந்தையுடன் சிறையில் இருக்கிறார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon