மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தக்காளி - வெங்காயம்: விலை உயர்வு சீராகும்!

தக்காளி - வெங்காயம்: விலை உயர்வு சீராகும்!

தற்போது ஏற்பட்டுள்ள தக்காளி மற்றும் வெங்காயம் விலை உயர்வு என்பது வழக்கமான பருவ மாற்றங்களில் ஒன்று என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் சில்லறை விற்பனையில், வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.51ஆகவும், தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.80ஆகவும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வெங்காயம் விலை தோராயமாக கிலோ ஒன்றுக்கு ரூ.37ஆகவும், தக்காளி விலை தோராயமாக கிலோ ஒன்றுக்கு ரூ.45ஆகவும் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பஸ்வான் பேசும்போது, "இந்த விலையுயர்வு பருவ மாறுபாட்டால் ஏற்பட்டது. இது தற்காலிகமானது. சில வாரங்களில் விலையுயர்வு சரியாகிவிடும். அடுத்த வாரங்களில் புதிய தக்காளி மற்றும் வெங்காயம் வரத்து வந்துவிடும். காய்கறிகள், அரிசி மற்றும் சில பொருட்களின் விலை நிலையாகத்தான் உள்ளது" என்றார்.

நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் அவினேஷ் ஸ்ரீநிவஸ்தா கூறும்போது, "தற்போது காரிஃப் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய சந்தைகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் விலையுயர்வு விரைவில் சீராகிவிடும்" என்றார். கடந்த பருவத்தை ஒப்பிடும்போது இந்தப் பருவத்தில் 25 சதவிகிதம் குறைந்த பரப்பிலேயே வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விலை வீழ்ச்சியே காரணமாகக் கூறப்படுகிறது. மழையால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையும் விலையுயர்வுக்கு ஒரு காரணமாகும். அடுத்த பத்து முதல் பதினைந்து நாட்களில் நிலைமை சீராகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon