மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

குறுகிய தேசியவாதம்!

குறுகிய தேசியவாதம்!

குறுகிய தேசியவாதம் என்ற பெயரால் நாட்டில் பிளவு ஏற்படுத்தப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளான நேற்று (அக்.31) அவரது பெயரில் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக சங்கீதப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த விருதை வழங்கிக் கவுரவித்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சோனியா காந்தி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனினும் சோனியா எழுதி அளித்த குறிப்பை அவர் சார்பாக ராகுல் வாசித்தார்.

அதில், “நமது தேசத்தைப் பிளவுபடுத்தி விழுங்கத் துடிக்கும் தீய சக்திகளுக்கு எதிராக வீரத்துடன் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் இந்திரா காந்திபோல இருக்க வேண்டும் என்பதை அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருது நமக்கு நினைவூட்டுகிறது.

முற்போக்கான, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியப் பண்பாட்டை தனது வாழ்நாளில் இந்திரா காந்தி கட்டமைத்தார். அவை தற்போது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டன . நாட்டில் அதிகரித்துவரும் சகிப்பின்மை, இந்திரா காந்தி எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கப் போராடினாரோ அதைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு என்பது முன்பைவிடத் தற்போது மிக அவசியத் தேவையாக உள்ளது. குறுகிய தேசியவாதம் என்ற பெயரில் நாட்டில் பிளவுகள் அதிகரித்துள்ளன.

தவறான, விஞ்ஞானபூர்வமற்ற யோசனைகளை அமல்படுத்திவரும், நாட்டை வரலாற்றைத் திரித்து எழுத முயற்சிப்பவர்களின் கையில் நமது தேசத்தின் பாரம்பரியம் சிக்கியுள்ளது.

மதங்களை வைத்து யாரையும் இந்திரா காந்தி மதிப்பிட்டது இல்லை. 'புளூ ஸ்டார்' நடவடிக்கைக்குப் பிறகுகூட, தனது சீக்கியப் பாதுகாவலர்களை அவர் மாற்ற அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தி கட்டிக்காத்த தேசிய ஒருமைப்பாடுக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon