மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சதா: திரை வாழ்வில் திருப்புமுனை!

சதா: திரை வாழ்வில் திருப்புமுனை!

சதா நடிக்கும் டார்ச் லைட் திரைப்படம் பாலியல் தொழிலாளிகள் படும் இன்னல்களையும் தரகர்களால் அவர்கள் சுரண்டப்படுவதையும் பதிவு செய்துள்ளதாக அதன் இயக்குநர் மஜித் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த தமிழன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மஜித் டார்ச் லைட் படம் குறித்து டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “தமிழன் படத்தின் வெற்றிக்கு பிறகு சில சிறிய படங்களை இயக்கினேன். ஒரு வலுவான கதைக்காக காத்திருந்தேன். அப்போது தான் டார்ச் லைட் படத்திற்கான கதை தோன்றியது. இப்படம் எவ்வாறு வறுமையில் வாடும் இளம் பெண்கள் தரகர்களால் கட்டாயப்படுத்தி இந்த தொழிலுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் லாரி டிரைவர்களை குறிவைத்து நடத்தப்படும் இத் தொழிலை விவரிக்கிறது. இதை எனது கனவு திரைப்படமாக உணர்கிறேன். இது நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

சதா இந்த படத்தில் ஒப்பந்தமானது குறித்துக் கூறிய அவர், “நாற்பது கதாநாயகிகளிடம் கதையை கூறினேன். ஆனால் பாலியல் தொழிலாளியாக நடிக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. அதன்பின் சதாவிடம் கூறும் போது கதையை கேட்டவுடன் கண்கலங்கிவிட்டார். படம் குறித்து நான் செய்த ஆய்வுகளையும் பாலியல் தொழிலாளிகள் எவ்வாறு இதற்குள் சிக்கவைக்கப்பட்டனர் என்பது குறித்த வீடியோக்களையும் காண்பித்தேன். அதை பார்த்ததும் மிகவும் கலக்கமடைந்தார். இந்தப் படம் அவரது திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

மெட்ராஸ், கபாலி படத்தில் நடித்து கவனம் பெற்ற ரித்விகாவும் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon