மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல்!

நியூயார்க்கில் தீவிரவாதத் தாக்குதல்!

சில வருடங்களாகவே வாகனங்களை மக்கள் கூட்டம் மீது மோதி கொடூரமாக தாக்குதல் நடத்தும் உத்தியை ஐரோப்பாவில் தீவிரவாதிகள் செயல்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலும் இதேபோன்ற கொடூரத் தாக்குதல் நேற்று (அக்டோபர் 31) நடந்திருக்கிறது.

நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் செல்லும் நடைபாதையில் தீவிரவாதி ஒருவர் லாரி ஓட்டி வந்து பாதையில் சென்றவர்கள் மீது மோதி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

2001 ஆம் ஆண்டு மிகக் கொடூரத் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான நியூயார்க்கில்... உலக வர்த்தக மையம் நினைவுச் சின்னம் அருகே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியு நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சைபுல்லா சைபொவ் (29) என்றும், அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க போலீஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும்... தாக்குதல் நடத்திய நபர் லாரியிலிருந்து இறங்கியபோது போலீஸார் அவரை சரமாரியாக சுட்டதில், தீவிரவாதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் நியூயார்க்கில் இருந்து தகவல்கள் வருகின்றன. தாக்குதலில் பலியான 8 பேரில் 5 பேர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்க அதிபர் இந்தத் தாக்குதலை கண்டித்து, , "நியூயார்க் தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும். நியூயார்க் நகர போலீஸாருக்கு எனது நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon