மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

இந்தியா VS நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியா VS நியூசிலாந்து: கேம் பிளான்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், இன்று (நவம்பர் 1) டெல்லியில் தொடங்கவுள்ளது.

டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் செயல்பாடு சற்று மோசமாகவே இருந்து வருகிறது. இதுவரை இரு அணிகளும் 6 முறை சந்தித்துள்ளன. அதில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 1 போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்யக் கடுமையாக போராடும். இந்தியா சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். நியூசிலாந்து அணியும் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் கடுமையான சவால் அளிக்கும் அணியாக உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா, கேப்டன் கோலி நல்ல ஃபார்மில் உள்ளனர். ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மற்றும் அதிரடி ஆட்டம் இந்தியாவிற்கு கூடுதல் பலம். இந்தப் போட்டியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வுபெறுகிறார். அதனால் இன்றைய போட்டியில் நெஹ்ரா களமிறங்கும் பட்சத்தில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதனால் பந்துவீச்சைப் பொறுத்தவரை அனுபவ வீரர் நெஹ்ராவுடன், `டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட்' ஜஸ்ப்ரீத் பும்ரா கலக்கக் காத்திருக்கிறார். சுழற்பந்துவீச்சில் யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ் உள்ளனர்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு, டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளனர். பேட்டிங்கில் ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன், டாம் லதாம் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்களை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவின் பாடு திண்டாட்டம் தான். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. சம பலத்தில் இருக்கும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon