மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

உடல்நலம் தேறி வருகிறார்!

உடல்நலம் தேறி வருகிறார்!

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று (அக்டோபர் 31) இரவு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சி நிர்வாகிகளோடு சந்தித்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் கோபாலபுரம் வந்த ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரை வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர் கருணாநிதியைச் சந்தித்த ராமதாஸ் 15 நிமிடங்களுக்கு மேல் அவரோடு செலவிட்டார்.

ராமதாஸைப் பார்த்ததும் கலைஞரின் முகத்தில் புன்னகை பூத்தது. உடனே, கருணாநிதியின் கைகளைப் பற்றிக்கொண்டார் ராமதாஸ். அப்போது ஸ்டாலின் கருணாநிதியின் அருகே சென்று, “யார் வந்திருக்கா... தெரியுதா?” என்று கேட்க, ராமதாஸ் என்பதை உணர்ந்த கருணாநிதி அவரது பெயரைச் சொல்ல முடியாமல் தவித்தார். ஆனால், அவரது உதடும், கண்களும் ராமதாஸைக் கண்டுகொண்டதை அசைவின் மூலம் உணர்த்தின.

நெகிழ்ச்சியான நிமிடங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “கலைஞரைப் பார்த்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. காரணம், அவர் என்னைப் புரிந்துகொள்ளுகிறார். என்னைத் தெரிந்துகொண்டார். தம்பி ஸ்டாலின் அவரது காதோரம் போய் நின்று, ‘யார்?’ என்று கேட்கும்போது அவருக்கு முழுதும் என் பெயரைச் சொல்ல வரவில்லையே தவிர, பேச முயற்சிக்கிறார். எல்லாம் தெரிந்துகொள்கிறார்.

என்னைப் பார்த்து சிரித்தார். தலைவர் ஜி.கே.மணிக்குத் தலையில் கைவைத்து ஆசீர்வாதமே பண்ணினார். ஏ.கே.மூர்த்திக்கும் ஆசீர்வாதம் செய்தார். முன்பைவிட அவரது உடல்நலம் இப்போது தேறி வருகிறது. மேலும், தேறி பேசுகின்ற நிலைக்கு நிச்சயமாக அவர் வருவார்.

நான் ஒவ்வொருமுறை அவருக்கு நேரிலோ, தொலைபேசியிலோ வாழ்த்துகளைச் சொல்லும்போது நூற்றைக் கடந்தும் நீங்கள் வாழ்வீர்கள் என்று அவரிடம் சொல்வதுண்டு. அந்த விருப்பத்தை இப்போதும் பகிர்ந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டார் ராமதாஸ்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon