மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 நவ 2017

இரட்டை இலை: இறுதி விசாரணை!

இரட்டை இலை: இறுதி விசாரணை!

‘இலை மீட்புப் பயணம்’ என்று தினகரன், எடப்பாடி – ஓ.பி.எஸ். என இரு அணியினரும் தங்களது டெல்லி பயணத்தை அழைத்துக்கொள்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் 1) இறுதி விசாரணையில் ஆஜராவதற்குத்தான் இந்த டெல்லி பயணம்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றிய இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்ட விசாரணை கடந்த 6ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. அன்று 13ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டாம்கட்ட விசாரணையிலும் முடிவு மேற்கொள்ளப்படாமல் அக்டோபர் 23ஆம் தேதிக்கு மூன்றாம்கட்ட விசாரணையை ஒத்தி வைத்தனர். அன்று, தினகரன், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகிய இரு தரப்பினரும் தமது வாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையர் ஏ.கே.அக்சல் குமார் மற்றும் இரு தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதில் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணி சார்பாக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கறிஞர் சேதுராமன் ஆஜராகினர். டி.டி.வி.தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் மாத்தூர், ராஜா செந்தூர்பாண்டியன், ரமேஷ் என்.கேஸ்வாணி மற்றும் விவேக் சிங்வி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்பினர் வாதிட்டபோது, “அதிமுக கட்சியை பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். பிறகு டி.டி.வி.தினகரன் எப்படி கட்சி தலைமையை ஏற்க முடியும்? மேலும், எங்களது அணிக்குத்தான் பெரும்பான்மை அதிகம் உள்ளது என்பதை நிரூபிக்கும்விதமாகப் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் எங்கள் அணி சார்பில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் 1,877 உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரத்துக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே, அதிமுக கட்சியை வழிநடத்தவோ அதில் உள்ள உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தவோ தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கம் செய்யப்பட்ட நபராக இருந்த சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது எந்தவிதத்திலும் செல்லத்தக்க ஒன்றாக இருக்காது. மேலும், எங்கள் தரப்பின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஐந்து பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று எதிரணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், அதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் இதுவரை எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாதது ஏன்? இவை தவிர, அதிமுக கட்சி விதிப்படியும் தார்மீக ரீதியாகவும் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவுக்கு எந்தவித உரிமையும் கட்சியில் கிடையாது.

அதனால், தினகரன் தரப்பு குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லை. மேலும், ‘தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன். கட்சியில் தலையிட மாட்டேன்’ என்று கூறியதன் அடிப்படையில்தான் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டார்.

அதிமுக கட்சியில் பொதுக்குழு, செயற்குழு, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட 95 சதவிதத்துக்கும் மேலான அதிகப்படியான உறுப்பினர்கள் எங்களிடம்தான் உள்ளனர். அதனால், இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இதை தவிர எதிரணி சார்பில் கட்சியில் தற்போது செய்துள்ள எந்தவித திருத்தங்களையும் ஏற்றுகொள்ள கூடாது” என்று வாதிட்டனர்.

இதையடுத்து தினகரன் தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.

“எங்ககளது அணி சார்பில் அதிகப்படியான உறுப்பினர்கள் எங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும்விதமாகத் தேர்தல் ஆணையத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்பதையும் தீவிர பரிசீலனை நடத்த வேண்டும். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசோதிப்பது மட்டும் இல்லாமல் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

அதிமுக கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளே கிடையாது. கட்சியில் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதனால், கட்சியில் தற்போது புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எந்த ஒரு சட்டத் திருத்தங்களையும் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதேபோல் அதிமுக கட்சியில் சட்டபூர்வ விதிகளை மீறி செயல்பட்டு வருபவர்களை ஒரு குழுவாகக்கூட கருத முடியாது. ஒரு கட்சியின் பொதுச்செயலாளரையே நீக்கியவர்கள் கட்சியின் அமைப்புக்குள் எப்படி உண்மையாக செயல்பட முடியும்?

எனவே, எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அணைத்து ஆவணங்களையும் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டது தினகரன் தரப்பு.

இதையடுத்து வழக்கு அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நவம்பர் 1ஆம் தேதியன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக இரு தரப்பினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலை விவகாரத்தில் இன்று ஒருவேளை இறுதி முடிவு எடுத்தால், அதனால் பாதிக்கப்படும் எந்த அமைப்பும் நீதிமன்றத்துக்குப் போகவே வாய்ப்பு அதிகமுள்ளது. அதேநேரம் இன்று தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்குமா என்பதும் எதிர்பார்ப்புக்கும் கேள்விக்கும் உரியதாகியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 1 நவ 2017