மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தினகரன் ஆதரவு எம்.பிக்களுக்கும் நெருக்கடி!

தினகரன் ஆதரவு எம்.பிக்களுக்கும் நெருக்கடி!

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட, அதுதொடர்பான வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் எம்.பிக்களின் பதவிமீது கண் வைத்திருக்கிறது ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். அணி.

நேற்று (அக்டோபர் 31) டெல்லியில் ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவை, ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகிய மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இது, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவநீத கிருஷ்ணன், “இது அம்மா எனக்கு அளித்த பதவி. என்மீது யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

இந்த டெல்லி நடவடிக்கைக்கு ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.

“எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீரும் ஒரே அணியில் இருந்தாலும், ஒருவரையொருவர் இன்னும் முழுதாக நம்பவில்லை. டெல்லி சென்று பிரதமரிடம் தன்னைப் பற்றி புகார் அளித்ததாகக் கருதுகிறார் எடப்பாடி. மேலும், தனக்கு எதிராக ஓ.பன்னீரும், தினகரனும் ஒரே அணியில் சங்கமிக்கலாம் என்றும் தமிழக உளவுத்துறை முதல்வருக்குத் தகவல் அளித்துள்ளது. ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளரான மதுசூதனன்கூட ஓரிரு நாள்களுக்கு முன் கடலூரில், ‘தினகரன் வசம்தான் ஆட்சி இருக்கிறது. அவர் சொன்னால் அது நடக்கும்’ என்று சொன்னார். இப்படிப்பட்ட நிலையில், தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர் செயல்பட வேண்டும் என்ற எடப்பாடி தரப்பின் நிர்பந்தத்தின் பேரில்தான், இந்த மனு டெல்லியில் அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

ஏற்கெனவே இதேபோல ஐக்கிய ஜனதாதளத்தில் நிதீஷ் குமாருக்கும், சரத் யாதவுக்கும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சரத் யாதவ்வை ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நிதீஷ் குமார் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.

அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், அதேபோன்றதொரு பிரச்னைக்காக அதிமுகவின் ஒரு பிரிவினர், தினகரன் அணி எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு மனு கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை தமக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துவதாக சரத் யாதவ் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோன்றதொரு நிலையை இப்போது தினகரனும் சந்தித்து வருகிறார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon