மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

1. சென்னை மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் அதிகமாக இருந்தாலும் 24 மணி நேரமும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்து தகவல் கொடுக்கலாம்.

2. 9445477205, 1913 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்களைத் தொடர்புகொண்டும் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் தெரிவிக்கலாம்.

3. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற 48 மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

4. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 9 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், சென்னை முகாம்களில் ஒரு குழுவுக்கு 45 வீரர்கள் என்ற நிலையில் குழு தயாராக இருப்பதாகவும், தேவையைப் பொறுத்து மீட்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், மீட்புப் பணிகளுக்கான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது.

5. தஞ்சையில் மழை பாதிப்பு குறித்துத் தெரிவிக்க 1077 என்ற எண்ணைக் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சையில் 194 இடங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதி எனக் கண்டறிந்து, அப்பகுதியில் உள்ள மக்களைத் தங்கவைக்க 534 தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

6. அத்துடன் மழையால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காக்க, தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீர் வழங்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 0.5 குளோரின் பருகுவதால் எந்த நோயும் ஏற்படாது எனச் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

7. 420 அவசர கால ஆம்புலன்ஸ்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 770 தற்காலிக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. மழையால் செல்போன் சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

9. மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மின்சாரம் தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

10. சென்னையில் 15 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon