மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பிறந்த நாள் கட்டுரை: கோணங்கி - மந்திரச் சொல்லாடல்களால் வசீகரிக்கும் ரஸவாதி!

பிறந்த நாள் கட்டுரை: கோணங்கி - மந்திரச் சொல்லாடல்களால் வசீகரிக்கும் ரஸவாதி!

ஆ.சந்திரசேகர்

மண்புழுவின் உடலை விடுத்து மண்ணாகிப்போன மண்ணையே மீண்டும் மீண்டும் உமிழ்நீர் சுரந்த உடலால் பிணைப்பதைப்போல் தன் கூர்ந்த இருட்டுப் பார்வையால் கிராமத்துக் கிழவிகளின் நினைவலைகளில் எஞ்சிப்போன பழுப்பு நிற நினைவைத் தன் படைப்புகளில் நிகழ்த்திக் காட்டுகின்ற கோணங்கி உண்மையில் புதுமைக்கு இளங்'கோ’ தான். சிந்தித்துப் பேசாமல் கந்து கந்தாகக் கதையை விவரிக்கும் முகம்கொண்ட கோணங்கியின் பிறந்த தினம் இன்று (நவம்பர் 1).

கண்ணையும் எழுத்தையும் பிரிக்க முடியாவண்ணம் ஒரே நேர்கோட்டில் சுழலவிடும் மந்திரம். கதைக்குள் இருக்கும் பாத்திரமாக இல்லாமல் விவரிப்புகள்தோறும் உடன்வரும் இருட்டாக இருந்து வாசிப்பாளனையே நோட்டம்விடும் கதையாளனாகக் கறுப்புக்கும் வெள்ளைக்கும் தாடையின் தாழ்வாரத்தில் இடம்கொடுத்துச் சுருட்டிய மயிரோடு நீண்ட பயணம் கொள்ளும் பயணி. நளினம் சொட்டும் பேச்சிலும் சிரிப்பிலும் எதிராளியையும் பணிய வைக்கும் ரசம் தெரிந்த பீசம்.

மொழிச் சித்தன்

பேனாவைக் கவிழ்த்த நாள் முதலாய் ரகசியம், காதலியின் சங்கேதக் குறி, நட்பின் சமிக்ஞை, எதிர்ப்பை நோக்கிய எள்ளல், காலமயக்கத்தில் சிக்க வைக்கும் சிலந்தி, தனி மொழியின் இயல், இசையாகிப் போன எழுத்துகளில் மயக்குதல், மொழிச் சித்தனாக, கடலாய் விரியும் ஒரு வரியென தம் படைப்புகளில் நிகழ்த்தி காட்டுகின்ற ரஸவாதியாகவே இருப்பது, அறியத் தொடங்கும் குழந்தையின் பிரமிப்பையே நமக்கு உணர்த்துகின்றன.

எழுத்தாளனுக்கு இவர் குறிப்பிடும் வரையறை முழுதும் அனுபவம் மட்டுமல்லாமல் பொருந்திப்போகின்ற ஆளாகவும் கோணங்கி திகழ்கிறார். “கோவில்பட்டியில் தொடங்கிய ஞாபகப் பரப்பு உலகின் எல்லையில் முடியாமல் பிரபஞ்ச எல்லையை நோக்கி நீள்கிறது” என்ற ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் அவதானிப்பு முற்றுபெற்றதாகவே தோன்றுகிறது. உவமையும் உருவகமும் விவரிப்பு முறையும் அனைத்து வித எல்லையையும் கடந்து தீராத காற்றின் பக்கங்களோடு பயணித்து அமைதி பெறும் வெளிதனிலும் விரிவதை இவரின் படைப்பு கொண்டு நம்மால் அவதானிக்க முடிகிறது.

மணல் வெளியினைப் பார்க்கும் பார்வை எட்டாத கற்பனையை ஒருகணத்தில் நிகழ்த்தி காட்டுகிறார். “உருவமற்ற வனமே சுருண்டு பாலை எனும் சலஸ்திரீயாக ஆழ்சுனையில் தூங்கியது” (பாதரச ஒநாய்களின் தனிமை) என்ற விரிப்பு இதுவரை சுரத்தை நாம் பார்த்த பார்வையை விடுத்து நீர் நிறைந்த, மறைந்திருக்கின்ற முறையை வார்த்தை ஜாலங்களால் வர்ணமிடுகிறார். ஸ்திரீயைச் சேவல் பெண்ணாக மாற்றுவது, குளத்தங்கரைப் பெண்ணை மீனாக்குவது, புத்தகத்தைப் பச்சையாக, வயலட்டாக, ரத்தமாக, இருட்டாக, வாசனையாக, சாம்பலாக, நிறமற்றதாக என்று நிலையற்ற தன்மையினை அனைத்துப் பொருள்களின் மீதும் ஏற்றி அதனதன் இருப்பை, வடிவத்தை, குழைக்கின்ற மாந்திரீகராகவே படைப்புகளில் வந்து மறைகிறார்.

கவித்துவ, அனுபவத்தின் உச்சம்

பிதிரா என்னும் நாவலில் உப்பு, மிகுந்த கவனத்துக்குரிய ஒன்றாக ஆழ்ந்து அகழ்ந்து வரலாற்றோடு விவரிக்கப்படுகிறது. உப்பையும் காமத்தையும் ஒருசேரப் பார்க்கும் முறை புதுமை. “பாலியல் வேட்கையை எரியச் செய்வது உப்புதான். காமத்தின் கணிதமாக உப்பு” (பிதிரா) என்ற வரி வெறுமனே விவரிப்பாக இல்லாமல் உலக உயிர்களின் உடலுறவில் உப்பின் முக்கியத்துவத்தைத் தன் அனுபவத்தின் வழியே விவரிக்கிறார். “பூமிக்கு வெளியே நின்று பார்த்தபோது நிலவுப் பரப்பில் நடமாடித் தனது சொந்த இனத்தையே பார்த்தபோது சிறிய தானியமாகச் சுழன்றுகொண்டு இருந்தது பூமி. வெள்ளி மணல் உருண்டு உருண்டு ஊரின் நினைவுகளை இழுத்து செல்கிறது” (பாழி) என்பன போன்ற இடங்கள் கவித்துவ, அனுபவத்தின் உச்சமாகவே எண்ண தோன்றுகிறது.

தமிழ்ப் புனைவுலக வரலாற்றில் தனக்கான தனித்த இடத்தோடு தனித்த மொழியும், வாசகர்களையும் பெற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பேசப்படும் படைப்புகளை வாசகர்கள் மத்தியில் விட்டுள்ளளார். புரியாத புலப்படாத தன்மை என்பது அவரவர் அறிவு சார்ந்தது. ஆகவே, இந்தப் படைப்பாளனை மெச்சும் காலம் இனிதான்.

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு:

ஆ.சந்திரசேகர், கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராய் பணிபுரிகிறார். நவீன இலக்கியத்தில் ஆழமான வாசிப்பு கொண்டவர். கதை, கவிதை, கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon