மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

அமைச்சர்கள் பேச்சு: தலைவர்கள் கண்டனம்!

அமைச்சர்கள் பேச்சு: தலைவர்கள் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அரசு, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ‘மழை வந்தால் தண்ணீர் தேங்குவது என்பது இருக்கத்தான் செய்யும்’ என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (அக்.31) செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதேபோல், அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘கடந்த 2015இல் பெய்த மழைக்கும் தற்போது பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தொலைக்காட்சிகள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றன’ எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், ‘சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாலை மூன்று மணி வரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என விளக்கமளித்தார்.

‘வெள்ளம் ஏற்படும் இடங்களில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதே’ என்ற கேள்விக்கு ஆவேசமடைந்த வேலுமணி, ‘நீங்கள் எத்தனை வருடமாகச் சென்னையில் உள்ளீர்கள்? உங்கள் பெயர் என்ன?’ எனச் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், ’அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிடச் சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டோம்’ என்று கூறினார். அமைச்சர்களின் இந்த பொறுப்பற்றப் பேச்சுகள் சர்ச்சையாகியுள்ளது.

அமெரிக்காவைவிடத் தமிழகத்தில் வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்ற வேலுமணியின் கருத்தை விமர்சித்துள்ள ராமதாஸ், “அமெரிக்க அதிபரைத் தற்கொலை மையம் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், “இதெல்லாம் நமது தலையெழுத்து” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பருவமழை தொடர்பாக தமிழக அரசு எவ்வித முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் நலனைப் போலித்தனமாக கையாலும் ஆட்சியாளர்களால் 10 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், மழை காரணமாக உயிர்ப் பலி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

லண்டன் மற்றும் அமெரிக்காவில் வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட சீரமைப்பு முறைகளைக் காட்டிலும், தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுவது அபத்தமானது எனவும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயக்குமாரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வருவாய்த்துறையும், அமைச்சர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை எடுத்திருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டனர். ஆனால் வடிகால் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தற்போதைய மழை அம்பலப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி மழைநீர் தேங்காமல் வடிவதற்கான ஏற்பாடுகளை முழு அளவில் செய்ய வேண்டும். ‘மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல” எனக் கூறியுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon