மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

கம்யூனிஸ்ட் கொடி, முதல்வர் படம் எரிப்பு!

கம்யூனிஸ்ட் கொடி, முதல்வர் படம் எரிப்பு!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அணியைச் சார்ந்தவர்கள் நேற்று (அக்டோபர் 31) மாலை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடியையும், கேரள முதல்வர் படத்தையும் எரித்துள்ளனர்.

பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை 6 மணி அளவில் சென்னை தி.நகரிலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தினார்கள் என்றாலும் ஒரு கட்சியின் கொடியையும், ஒரு மாநில முதல்வரின் படத்தையும் எரித்திருப்பதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்தச் சம்பவத்துக்கு உடனடி எதிர்வினையாக இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, சங் பரிவார அமைப்புகள் இதுபோன்ற ஆத்திரமூட்டும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய வன்முறை அரசியலை அம்மாநில மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதனால் சங்பரிவார அமைப்புகள் மேலும் ஆத்திரமடைந்துள்ளன.

சங்பரிவார அமைப்புகளின் வன்முறையைக் கண்டிப்பதோடு, அராஜகமான முறையில் கட்சி அலுவலகம் முன்பு வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது” என்று கடுமையான முறையில் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மார்க்சிஸ்ட் அலுவலக வாசலில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினர்மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில், 143,188,294(b),285 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். பெயர் குறிப்பிடாமல் சுமார் 11 நபர்கள், ஏபிவிபி அமைப்பினர் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon