மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும்!

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும்!

கேபிள் சங்கர்

நியாயமாக சினிமாவும் பைரஸியும் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டோபஸாய் ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருப்பது பைரஸி என்பதால் அதை முதல் நிலையில் சொல்ல வேண்டிய கட்டாயம்.

சென்ற வாரம் என்னுடய புதிய திரைப்படமான ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தேறியது. இது அந்தாலஜி வகையைச் சேர்ந்த திரைப்படம். ஆறு கதைகள், ஆறு இயக்குநர்கள். எல்லாமே ஒரே வகையிலான கதைகள். உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக அனைத்துக் கதைகளின் கிளைமேக்ஸ்களும் கடைசி அரை மணி நேரத்தில் காண்பிக்கப்படும் படம். இப்படியான சிறப்புகள் கொண்ட சுயாதீனத் திரைப்பட விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியவர்கள் அனைவரும் பேசிய முக்கிய விஷயம் நாம் ஐந்து வாரமாய்ப் பேசிய ஓ.டி.டி. டிஜிட்டல் ப்ளாட்பார்ம் பற்றியும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றியும் பைரஸி பற்றியும்தான்.

பைரஸியின் பயணம்

சினிமா டிஜிட்டலாக மாற ஆரம்பித்ததிலிருந்த காலத்திலிருந்தே பைரஸி ஆரம்பித்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஊர்த் திருவிழாவில் திரை கட்டிப் படம் பார்த்து வளர்ந்தவர்கள்தான் நாம். வீடியோ கேசட் வந்த பிறகு அதே கொண்டாட்டத்தோடு 12 அல்லது 24 மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து மொத்தமாய் நான்கைந்து படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் நாலு பழைய படமென்றால் ரெண்டு புது படமாய்த்தான் இருக்கும். அப்படிவரும் புதுப்படங்கள் திருட்டுத்தனமாய் எடுக்கப்படும் கேமரா பிரிண்டுகளாய் இருக்கும். ரெண்டு வாரத்துக்குப் பின்பு அதே படம் உருது சப்டைட்டில்களோடு, திரை நெடுக நீலம் ஆக்கிரமிக்கப்பட்ட கொஞ்சம் நல்ல பிரிண்ட் வரும். மீண்டும் சில வாரங்களுக்குப் பின் நல்ல தரமான வீடியோ பிரிண்டுகள் வலம் வரும்.

முதலில் வந்தது திருட்டுத்தனமாகத் திரையரங்குகளில் எடுக்கப்பட்ட வீடியோ. அதன்பின் வருபவை எல்லாம் வெளிநாட்டு உரிமை என்று அரபு மற்றும் சிங்கப்பூர் மலேசியாவுக்கு விற்ற உரிமம் மூலமாக வீடியோ கேசட்டுக்கள் வெளியிடப்பட்ட சூட்டோடு, நம்மூருக்கு ப்ளைட் ஏற்றிவிடுவார்கள். பின்பு வழக்கம்போலப் பிரதிகள் எடுக்கப்பட்டு விநியோகம் நடக்கும்.

வீடியோ கேசட்டைப் புதிய வரவான சிடி வந்து மொத்தமாய் ஆட்டத்திலிருந்து விலக்கினாலும், பைரஸி செழித்து வளரத்தான் செய்தது. சிடி யுகத்தில் பைரஸி என்பது உள்ளங்கை அடக்கமானது. அடுத்த கட்டமாக டெக்னாலஜியின் புதிய வரவான கேபிள் டெலிவிஷன் வந்து சிடியின் டிமாண்டைக் குறைத்தது. ஒரு சிடி வாங்கி பல நூறு பிரதிகள் போட வேண்டிய தேவையில்லை. ஒரு சிடி எடுத்து கேபிள் டிவியில் போட்டால் ஊரே பார்த்துவிடலாம் என்ற நிலை உருவானது.

பிறகு, இணைய யுகம். இணையம் பிரமாண்டமாக வளரத் தொடங்கி, இன்று 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வீட்டில் உட்கார்ந்தபடியே ஒரு முழுப் படத்தை மூன்று நிமிடங்களில் டவுன்லோட் செய்யக்கூடிய நிலையாகிவிட்டபடியால் பைரஸியும் மிக வேகமாக வளர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று உறுத்துவதில்லை. சினிமா, என்டர்டெயிண்ட்மெண்டுக்காகச் செய்யும் திருட்டுக்கள் திருட்டுக்களாகவே மக்களுக்குப் படுவதில்லை.

பைரஸியை நிறுத்தும் முயற்சிகள்

வீடியோ கேசட் காலத்தில் வெளிநாட்டு உரிமை விற்பதால்தான் பைரஸி வருகிறதென்று வெளிநாட்டு உரிமம் முதல் மூன்று வாரங்களுக்கு விற்காமல் முயன்று பார்த்தார்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள். எந்தப் பலனும் இல்லை. இன்றைக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இருபது வருசத்துக்கு முன் பேசியதுபோலவே பேசிக்கொண்டிருக்க, பைரஸி கட்டுக்குள் வந்த பாடில்லை. ஆந்திராவைப் பாருங்கள், கேரளத்தைப் பாருங்கள், இந்தித் திரையுலகைப் பாருங்கள்... அங்கேயெல்லாம் பைரஸியே இல்லை என்று உதாரணத்தோடு சொன்னாலும், அங்குள்ள யதார்த்த நிலவரங்கள் வேறு.

ஆந்திரத்தில் பெரும்பான்மை மக்களின் என்டர்டெயின்ட்டான சினிமா இங்கே இருக்கும் அளவுக்கு காஸ்ட்லி அல்ல. நல்ல தரமான ஒளி, ஒலி அமைப்புகளுடன் கூடிய அரங்கில் 80 ரூபாய்க்குள் திரைப்படம் பார்க்க முடியும். கேரளாவில் மக்களே பைரஸியை வரவேற்பதில்லை. அது போதாதென்று கேரள அரசு பைரஸிக்கென்றே தனிப் பிரிவைத் தொடங்கி, அப்லோட், டவுன்லோட் செய்கிறவர்களை எல்லாம் ஐ.பி அட்ரஸ் தேடிக் கண்டுபிடித்து முட்டிக்கு முட்டி தட்டிக்கொண்டிருக்கிறது. கேரளா, ஆந்திராவோடு ஒப்பிடுகிறவர்கள் இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள்.

பைரஸி ஒழிய என்ன செய்யலாம்?

பைரஸி குறைய வேண்டுமென்றால் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏதுவான விலை, தரமான அரங்குகள், வரும் பார்வையாளர்களுக்கான சேவை என இவையெல்லாம் மிகவும் முக்கியம். பொழுதுபோக்குக்காக உள்ளே வரும் பார்வையாளனின் பாக்கெட்டை மொத்தமாகக் காலிசெய்துவிடாமல் இருப்பது மிக முக்கியம். சமீபத்தில் ஆங்கில வெப்சைட் ஒன்றில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் ஒருவரிடம் பேட்டி எடுத்ததாகப் போட்டிருந்தார்கள். அதில் தயாரிப்பாளர்களே படங்களை லீக் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். ஓரளவுக்கு அது உண்மை என்றாலும், அந்தப் பேட்டி பெரும் பொய் என்பதுதான் நிஜம். ஏனென்றால் அந்தப் பேட்டியில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் பத்திரிகைகளில் படித்த விஷயங்களின் தொகுப்பாகத்தான் இருந்தன.

ஆந்திராவில் அத்தாரிண்டிக்குதாரேதி எனும் பவன் கல்யாண் படத்தைக் காழ்ப்புணர்ச்சி காரணமாக இணையத்தில் வெளியிட்ட கதை, போட்டி பொறாமையால் ஒரு படத்தை இணையத்தில் வெளியிட்டது என்பதுபோல பல கதைகள் உலவினாலும் இன்றைய அளவில் ஒரு படம் வெளியாகும் முன்பே பைரஸியாய் வெளியாகும் சாத்தியம் இரு நூறு சதவிகிதத்துக்கும் மேல். அத்தனை வழிகள் இருக்கின்றன. ஃப்லிம் இருந்த காலத்தில் இது சாத்தியமே இல்லை. அவ்வளவு துல்லியமான பாதுகாப்பு இருந்தது.

டிஜிட்டலான பின் எப்படி அவ்வளவு சுலபமாய் பைரஸி செய்ய முடியும்? பைரஸி நிஜமாய் எங்கிருந்து வருகிறது?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon