மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட நாவலும்

 சிறப்புக் கட்டுரை: சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட நாவலும்

அ.குமரேசன்

மூன்றாண்டுகளுக்கு முன்வந்த ஒரு திரைப்படத்தை இப்போது பார்க்க நேர்ந்தது. சிம்புதேவன் எழுதி இயக்கிய ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’என்ற அந்தப் படம் மாறுபட்டதொரு நகைச்சுவைக் கதையாக்கம்தான். ஆனால், அதில் உள்ள ஒரு செய்தியை வெறும் நகைச்சுவையாகச் சிரித்துவிட்டு ஒதுக்கிவிட முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பது அந்தச் செய்தி. ஒரு நிமிடத் தாமதமோ, ஒரு நிமிட அவசரமோ வாழ்க்கை ஓட்டத்தில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும்.

இந்தச் செய்தியோடு நின்றிருந்தால் ‘ஒ.க.மூ.க.’ சிரிக்கவைத்து ஒரு நல்ல சிந்தனையைச் சொல்கிற படம் என்ற பாராட்டுக்குரியதாகியிருக்கும். ஆனால், இந்தக் கருத்து விதி என்பதோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. ஒரு செயலை எப்போது தொடங்கினால் என்ன விளைவு ஏற்படும் என்பது முன்கூட்டியே கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. தெய்வ சக்தியால் நேரத்தின் ஓட்டத்தை அப்படியே பராமரிக்கவோ, தாமதப்படுத்தவோ, விரைவுபடுத்தவோ முடியும்; அதன்மூலம் நிகழ்வுகளையும் விளைவுகளையும் மாற்ற முடியும் என்றும் ‘ஒ.க.மூ.க.’ காட்டுகிறது. படத்தில் நகைச்சுவைக்காக என்றே சேர்க்கப்பட்ட மற்ற காட்சிகள், உரையாடல்களைவிட இதைத்தான் மிகப் பெரிய நகைச்சுவையாகச் சிரித்தேன்.

அறிவியல் கருவியாக சோதிடம்?

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவன (ஐஐஎஸ்) வளாகத்தில் வரும் நவம்பர் 25, 26 தேதிகளில் சோதிடம் தொடர்பான ஒரு பயிலரங்கம் நடைபெறவிருந்தது. நிறுவனத்தின் பழைய மாணவர்கள் சங்கம் (ஐஐஎஸ்ஏஏ) அந்தப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘தனிமனித முன்னேற்றத்திற்கான அறிவியல் கருவியாக சோதிடம்’ என்பது பயிலரங்கின் தலைப்பு. தனிமனித முன்னேற்றம் என்றால் சோதிடம் கேட்கிற தனிமனிதர்களா, சோதிடம் சொல்கிற தனிமனிதர்களா - எந்தத் தனிமனிதரின் முன்னேற்றம்?

அறிவியலாளர்களிடமிருந்தும் சமூக ஊடகப் பதிவாளர்களிடமிருந்தும் இந்தப் பயிலரங்கை அறிவியல் கல்வி வளாகத்துக்குள் நடத்துவதற்குக் கடுமையாக எதிர்ப்பு வந்தது. நிறுவனத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும்கூட எதிர்த்தார்கள்.

“சோதிடம் ஓர் அறிவியல்தான். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பயிலரங்குக்கு வந்தால் நம்பிக்கை ஏற்படும். இருபத்து நான்கு மணி நேரத்தில் நீங்கள் சோதிடராகிவிட முடியும்” என்று நிகழ்ச்சி அமைப்பாளர் விளக்கமளித்தார். இக்கல்வி நிறுவனத்தில் அறிவியல் படித்த அந்த முன்னாள் மாணவர் பிற்காலத்தில் சோதிடத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தாரோ அல்லது எதற்காகவோ சோதிடம் பார்த்து அதிலே நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டாரோ என்னவோ? அறிவியல் பாடங்களில் கோள்கள் பற்றிப் படித்தறிகிற தகவல்கள் சோதிடத் தொழிலில் இறங்குவோருக்கு “ரொம்ப சயின்டிஃபிக்கா சொல்றாரு” என்ற பெயர் வாங்குவதற்கு உதவிகரமாக இருக்குமே!

ஆயினும் நிறுவனத் தலைவர் அறிவியலாளர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, அந்தப் பயிலரங்குக்கான அனுமதியை விலக்கிக்கொண்டு விட்டார். அமைப்பாளர்கள் அதை வளாகத்துக்கு வெளியே எங்கேயாவது நடத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

கோள்களின் பயணத் திசையையும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கே எத்தனை கோணத்தில் இருக்கின்றன என்பதையும் வைத்து, நடந்தது என்ன நடக்கப் போவது என்ன என்றெல்லாம் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பவர்களால் மேற்படி பயிலரங்கம் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த இடத்தில் நடக்காது என்பதைக் கணிக்க முடியாமல் போனது சங்கடமானதுதான்.

வானத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்கள், கோள்களின் நடமாட்டத்தைக் கவனித்து, பருவநிலை மாற்றங்களோடு ஒப்பிட்டு அஸ்ட்ரானமி என்ற வானியல் அறிவியல் வளர்ச்சியடைந்தது. நட்சத்திரங்களின், கோள்களின் அசைவைப் பொறுத்து மனிதர்களின் வாழ்க்கை இப்படியிப்படி அமையும் என்று சொல்கிற அஸ்ட்ராலஜி என்ற சோதிடம் புறப்பட்டது வரலாற்றில் ஏற்பட்ட ஒரு தடம்புரளல்தான்.

வேதனையை மறக்கடிக்கச் செய்யும் மருந்து

கடந்த காலம் பற்றிய கசப்பு, நிகழ்காலம் பற்றிய ஐயம், எதிர்காலம் பற்றிய அச்சம் என்று வாழ வேண்டிய நிலையில் உள்ள மக்கள் சோதிடத்தை நாடுவதில் வியப்பில்லை. நம்பிக்கையோடு ஒரு செயலில் ஈடுபடுவதற்கும், ஏற்பட்ட ஒரு துயரத்துக்கு நாம் பொறுப்பல்ல, கோள்களின் நிலைதான் காரணம் என்று ஆறுதல் கொள்வதற்கும் சோதிடத்தை நாடுகிறார்கள். மதத்தைப் பற்றிக் கூறவந்த கார்ல் மார்க்ஸ், “மதம் ஒடுக்கப்பட்ட மனிதரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், உயிர்ப்பற்ற நிலைமையின் உயிர்ப்பு. அது மக்களின் அபின்” என்றார்.

மதம் ஒரு போதைப் பொருள் என்று மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்று மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அரைகுறையான புரிதலோடு கோபித்துக்கொள்வது போலவே, மதத்தை ஏற்காதவர்களும்கூட அரைகுறையான புரிதலோடு மார்க்ஸின் இந்த மேற்கோளைப் பயன்படுத்துகிறார்கள். நொந்துபோன மனங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கிற, வலி மறக்கச் செய்கிற மருந்து என்ற பொருளில்தான் அவர் இவ்வாறு கூறினார். அதாவது நோயின் வேரறிந்து உண்மையாகக் குணப்படுத்துகிற வேலையை மதம் செய்வதில்லை, மாறாக அப்போதைக்கு வேதனையை மறக்கடிக்கச் செய்கிறது.

மதம் பற்றிய இந்தக் கருத்தைச் சோதிடத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆம், சோதிடமும் ஒரு வகையில் தற்காலிகமாக வலி மறக்கச் செய்கிறது. தற்காலிமாகத் தெம்பூட்டி நடைபோட வைக்கிறது.

நம்பிக்கையும் முயற்சியும்

நாத்திகம் பற்றிய ஒரு விவாதத்தின்போது இவ்வாறு குறிப்பிட்டேன்: “கடவுளிடம் வேண்டுகோள் வைத்துவிட்டுத் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கிறவர்கள் நாத்திகர்களே. கடவுளுக்கு நேர்ந்துகொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடுகிறவர்கள் நாத்திகர்களே. கடவுளை வணங்கிவிட்டுப் பதவி உயர்வுக்காக மேலதிகாரிகள் மனங்குளிரச் செயல்படுகிறவர்கள் நாத்திகர்களே.”

கடவுளை நம்பாதவர்களுக்கு இந்தத் தொல்லை இல்லை. தேர்வுக்குப் படித்தால்தால் தேர்ச்சியடைய முடியும், மருத்துவமனையை நாடினால்தான் நலம்பெற முடியும், பணியிடத்தில் உழைத்தால்தான் பதவி உயர்வை அடைய முடியும் என்ற தெளிவோடு அதை மட்டுமே செய்வார்கள். நம்பிக்கையாளர்கள்தான் பாவம் கடவுளையும் முழுதாக நம்பி ஒப்படைத்துவிட முடியாமல், தங்கள் முயற்சியையும் முழுமையாக நம்பிச் செயல்பட முடியாமல் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

சோதிடத்தை நம்புகிறவர்களும் அப்படித்தான். எவ்வளவு புகழ்பெற்ற சோதிடர் கூறினாலும், கோள்களின் நிலைப்படி அல்லது விதிப்படி நடப்பது நடந்தே தீரும் என்று சும்மா இருப்பதில்லை. தங்கள் முயற்சிகளைத் தொடரவே செய்வார்கள். தினசரி ராசிபலன் பார்க்கிற யாரும், “இன்று பண வரவு” என்பதைப் பார்த்துவிட்டு, அதுதான் தானாகவே வரப்போகிறதே என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று சொல்லப்படுவதைக் கேட்டு மற்ற ராசிக்காரர்கள் சாலையில் கவனமின்றி நடப்பதில்லை. ஒருநாள் நேரம் ஒதுக்கி 12 ராசிகளுக்கான பலன்களையும் படித்துப் பாருங்கள். அத்தனையிலும் கூறப்பட்டிருப்பவை உங்களுக்கும் பொருந்துவது கண்டு முதலில் வியப்பீர்கள், அப்புறம் புன்னகைப்பீர்கள்.

சோதனையில் திடம் கூறுவதே சோதிடம் என்றொரு விளக்கத்தைக் கவிஞர் கண்ணதாசன் கூறினார். அந்த வகையில் இதில் ஓர் உளவியல் கூறு இருக்கிறது. அந்த உளவியல் நுட்பத்தைப் புரிந்துகொண்டு மொழியையும் நன்றாகப் பயன்படுத்துகிறவர்கள் நல்ல சோதிடராகப் பெயர் பெறுகிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ளிட்ட காரணங்களைக் கூறித் திருமணம் தடுக்கப்பட்ட பெண்களுக்குச் சாதகமாக, வரனுடன் பொருத்தம் சிறப்பாக இருப்பதாகக் கூறித் திருமணம் நடக்க மனிதநேயத்துடன் உதவிய சோதிடர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எதை எதிர்க்க வேண்டும்?

சோதிட நம்பிக்கைகள் மாறுவதற்கான சூழல்கள் இப்போதைக்கு ஏற்படப் போவதில்லை. ஆகவே, தங்கள் நிம்மதிக்காக ஜாதகம் பார்க்கிறவர்கள் பார்க்கட்டும், தொழிலாகச் செய்கிறவர்கள் செய்யட்டும். அவர்களது நம்பிக்கை சார்ந்த உரிமைப் பிரச்னையாகவும் இது இருப்பதால் அதற்குத் தடை விதிக்க யாரும் கோரவில்லை. அது அதிகாரபூர்வ கல்வியாக்கப்படுவதற்கும், உயர் கல்வி வளாகத்தை அதைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுவதற்கும்தான் எதிர்ப்பு.

நாட்டின் அரசமைப்பு சாசனம், அதன் லட்சியங்களில் ஒன்றாக அறிவியல் மனநிலை கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதையும் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, பல்கலைக்கழகங்களில் ஜாதக சோதிடம் பாடமாக்கப்படுகிறது. இப்போது அறிவியல் கல்வி நிறுவன வளாகத்திலேயே 24 மணி நேரத்தில் நாளும் கோளும் கற்கப் பயிலரங்கம்.

குறிப்பிட்ட கோள் நிலையில், குறிப்பிட்ட நொடியில் பிறப்பதுதான் வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கிறது என்றால், அதை ஒரு சிறந்த சோதிட அறிவியலாளரால் கணிக்க முடியும் என்றால், சில கேள்விகள் எழுகின்றன. எல்லாம் ஏற்கெனவே இறைவனால் அல்லது இறைவன் இயக்குகிற கோள்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றால், மனித முயற்சிகள் எதற்காக? எல்லாம் தானாக, கோள்கள் தீர்மானித்தபடிதான் நடக்கப் போகின்றன என்று சும்மா இருக்கலாமே? பெற்றோரின் ஜாதகப்படி இப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் என்றும் சொல்கிறார்கள். விதிப்படி ஒரு குழந்தை பிறந்தாக வேண்டும் என்றால், அக்குழந்தையின் பெற்றோர் கட்டிலுக்குப் போகாமல் இருந்துவிடலாமே...

இயற்கைச் சீற்றங்களிலும், தற்போதைய டெங்கு தாக்குதலிலும் கொத்துக் கொத்தாக உயிரிழக்கிறார்கள். அவர்களது கோள் நிலை ஒரே மாதிரியானதா? உ.பி. மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில் கோழிக்குஞ்சுகள் சாவது போலச் செத்துப்போன குழந்தைகளின் ஜாதகக் கட்டங்கள் ஒரே வகையானவைதானா? ஆம் என்று இதுவரையில் முன்னணி சோதிடர்கள் கூறியதுமில்லை, அறிவியல் ஆய்வு முறைப்படி நிறுவியதுமில்லை.

அடுத்து, இதுதான் இப்படித்தான் நடக்கப்போகிறது என்றால், அதைத் தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆகப்போகிறது? இதைக் கேட்டால், என்ன நடக்கும் என்பதை அறிந்துகொண்டால், வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும், தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். மனிதர்களால் அப்படித் திருத்திக்கொள்ள முடியும் என்றால், கோள்களின் ஆற்றல் பலவீனமாகிப் போகிறதே! அவற்றை இயக்குகிற இறைவனார்களை விடவும் மனித முயற்சி ஆற்றல்மிக்கதாகிறதே!

ஜாதக விதிப்படி குறிப்பிட்ட இருவர் மணமுடித்து இல்லற இணையாவார்கள் என்றால், ஜாதகம் பார்க்காவிட்டாலும் அவர்கள்தானே இணைவார்கள்? சுடர் விட்டெரிகிற சூரியனையும் ஒரு கோளாக வைத்திருக்கும் ஜாதக சோதிடக் கோட்பாட்டில் இப்படிப்பட்ட தர்க்க நியாயக் கேள்விகளுக்கு மதிப்பில்லை.

சாதியைக் காப்பாற்றும் சோதிடம்

நமது ஊரில், ஜாதக சோதிடம் இன்னொரு கைங்கர்யத்தையும் செய்துவருகிறது. அதுதான், குறிப்பிட்ட சாதி வளையத்துக்குள்ளேயே மக்களை வைத்திருக்கிற கைங்கர்யம். மணமக்களை முடிவு செய்கிற ஜாதகம் அவர்களது சாதி அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. காதலிலும் சாதி மறுப்புத் திருமணங்களிலும் ஜாதகக் கட்டுக்கு இடமில்லை.

ஆட்சிக்கு வருகிறவர்கள் அரசமைப்பு சாசனத்தைப் படித்தவர்களாகவும் இல்லை, படிப்பவர்களாகவும் இல்லை. இருந்தால், முதலில் சொன்ன அறிவியல் மனநிலை கொண்ட சமுதாயத்தை உருவாக்குகிற லட்சியம் பற்றியும் அறிந்திருப்பார்கள் அல்லவா? ஆனால், அவர்களோ தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது முதல், பதவி ஏற்பது வரையில், நாற்காலியில் உட்கார்வது உள்பட, சோதிடம் பார்த்து நேரம் குறித்துச் செய்கிறவர்களாக இருக்கிறார்களே. சோதிடக் கணிப்புப்படி நடக்காமல் போனால், ஜாதகம் குறித்ததில் தவறு என்று சோதிடர்களும் தப்பிவிடுகிறார்களே!

ஒரு சோதிடர் தன் அலுவலக வாயிலில் இவ்வாறு அறிவித்திருந்தார்: “97 சதவிகிதம் துல்லியமாகக் கணிக்கப்படும்.” அந்த 3 சதவிகிதம்? ஜாதகத்தில் சரியான நேரம் குறிக்கப்படாததால் ஏற்பட்ட துல்லியக் குறைபாடு என்று சொல்லித் தப்பிப்பதற்காகத்தானே?

ஜாதக சோதிடம் அறிவியல்பூர்வமானதுதான் என்றால் நாளை கிளி சோதிடம், கைரேகை சோதிடம், நாடி சோதிடம், ஏடு சோதிடம், குடுகுடுப்பை, குறிசொல்வது, அருள்வாக்கு... இன்ன பிறவற்றையும் பல்கலைக்கழகப் பாடமாக்குவார்களோ? ஆவிகளுடன் பேசுவதற்கான சிறப்புப் பட்டயப் பயிற்சிகள் தொடங்கப்படுமோ? சாலையோர மரத்தடிக்கு பதிலாக, அலுவலக அறை போட்டு, நவீன இருக்கைகளில் அமர்ந்து குறிசொல்லும் பட்டதாரிகள் வருவார்களோ? வேத காலத்திலேயே விமானம் பறந்தது, ஸ்டெம் செல் மருத்துவம் நடந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று ஆட்சி அதிகார்த்தில் இருப்பவர்கள் சொல்லும் இன்றைய பின்னணியில் இதெல்லாம் நடக்காது என்று உறுதியாகச் சொல்ல யாராவது தயாரா? இந்த நம்பிக்கைகளைக் கடவுள் பக்தியோடும் மதப்பற்றோடும் முடிச்சுப் போட்டு, கேள்வி கேட்கிறவர்களை மத விரோதிகள் என்று முத்திரை குத்தக் கிளம்பிவிடுவார்களே என்ற அலுப்பும் ஏற்படுகிறது. நமது வாழ்க்கை நாளை எப்படி அமைப்பது என்பதை நம் செயல்கள் முடிவு செய்யும். ஒரு வாதத்துக்காக அது எப்படி இருக்கும் என்பதை இன்றே தெரிந்துகொள்ள முடியும் என்றால், புதிர்ச் சுவையோடு அதை எதிர்கொள்ளும் ரசனையை எதற்காக இழக்க வேண்டும்? முன்பொரு தொலைக்காட்சியில் சோதிடம் பற்றிய விவாதத்தில் நான் கூறியது நினைவுக்கு வருகிறது: “எனது வாழ்க்கை கடைசிப் பக்கங்கள் கிழிக்கப்பட்ட மர்ம நாவலாக இருப்பதையே விரும்புகிறேன். அந்தப் பக்கங்களை முதலிலேலேயே படித்து நாவலின் சுவையைப் பறிகொடுக்க விரும்வில்லை.”

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். ‘தீக்கதிர்’ இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon