மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

கதாநாயகர்களாகும் நகைச்சுவை நடிகர்கள்!

கதாநாயகர்களாகும் நகைச்சுவை நடிகர்கள்!

நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் இருவரும் இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.

நட்டு தேவ் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை படங்களை இயக்கிய மணிகண்டனிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். “சமூக அவலங்களை பகடி செய்யும்விதமாக உருவாகும் இந்தப் படத்திற்கு சத்திய சோதனை என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையைக் கதைக்களமாக தேர்ந்தெடுத்துள்ளோம். இன்னும் இருபது நாள்களில் படப்பிடிப்பு தொடங்கும்” என படத்தின் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமீபகாலமாக பல்வேறு படங்களில் நகைச்சுவை காட்சிகளில் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் சிறப்பாக நடித்து வருகின்றனர். காக்கா முட்டை படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இவர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தயாரிப்பாளர் சமீர் ஐந்து இயக்குநர்கள் இணைந்து இயக்கும் மமகிகி படத்தை தயாரிப்பதோடு, அதில் ஒரு பகுதியை இயக்கியும் உள்ளார். மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் பாலு ஷர்மா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் புதிய படம் ஒன்றை சமீர் தயாரிக்கிறார். அந்தப் படம் குறித்து பேசிய அவர், “காதல் படமாக உருவாகும் இதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரிச்சயமான நடிகர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon