மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட குழப்பம்!

சிறப்புக் கட்டுரை: கடன் தள்ளுபடியால் ஏற்பட்ட குழப்பம்!

மிரிதுளா சாரி

கடந்த ஜூன் மாதத்தில் மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு அம்மாநிலத்தில் வங்கிகள் வழங்கும் கடன்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கிவிட்டது. காரிஃப் பருவத்துக்கு வழங்கப்பட வேண்டிய கடன் இலக்கை வங்கிகளால் எட்ட முடியவில்லை என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் சங்கம் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரிஃப் பருவத்துக்கான கடன் வழங்கல் காலம் ஏப்ரல் 1இல் தொடங்கி செப்டம்பர் 30இல் முடிவடைகிறது. வெறும் 16,767 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களையே வங்கிகள் வழங்கியுள்ளன. வங்கிகளுக்கான இலக்கான 40,547 கோடி ரூபாயில் 16,767 கோடி ரூபாய் என்பது சுமார் 41 சதவிகிதம் மட்டுமே ஆகும். ஆனால் 2016ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வங்கிகளின் இலக்கான 37,677 கோடி ரூபாயில் 30,210 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடன் வழங்கல் இலக்கில் 80 சதவிகிதக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்புகளுக்காக விவசாயிகள் காத்திருப்பதே கடன் வழங்கலில் சரிவு ஏற்பட்டதற்கு முதல் காரணம் என்று மகாராஷ்டிர மாநிலக் கூட்டுறவு வங்கியின் இயக்குநரான பிரமோத் கர்னத் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் மாநிலக் கூட்டுறவு வங்கி கவனித்துக் கொள்கிறது.

அனைத்து வங்கிகளும், முக்கியமாகக் கூட்டுறவு வங்கிகள் அவற்றின் கடன் வழங்கல் இலக்கை செப்டம்பர் மாத இறுதியிலேயே எட்டுவதாக பிரமோத் கூறுகிறார். சில வங்கிகள் கொடுக்கப்பட்ட இலக்கையும் கடப்பதுண்டு. ஆனால், இந்தாண்டில் இரண்டு காரணங்களுக்காக கடன் வழங்கலில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 2016ஆம் ஆண்டுக்கான கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்திருந்தது. இதேப்போன்று 2017ஆம் ஆண்டுக்கான கடன்களையும் மகாராஷ்டிர அரசு தள்ளுபடி செய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். இதனால் கடன் பெற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து பேங்க் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “நடப்பு ஆண்டில் நல்ல மழைப்பொழிவையும் தாண்டி பயிர்க் கடன் வழங்கல் குறைவாகவே இருந்துள்ளது. முக்கியமாக காரிஃப் பருவத்துக்கான கடன் வழங்கல் குறைவாகவே உள்ளது. இதற்கு அரசின் வேளாண் கடன் தள்ளுபடி திட்டமே முழுக் காரணம். ஏற்கனவே கடன்களை ஒழுங்காகச் செலுத்தி வந்த விவசாயிகள் கூட அரசின் கடன் தள்ளுபடி செய்தியைக் கேட்டபிறகு கடன் செலுத்துவதை நிறுத்திவிட்டனர்” என்றார்.

மற்றொரு காரணம், ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்குத் தகுதியான விவசாயிகள் தங்களின் பழைய கடன்களை முழுவதுமாகச் செலுத்தி முடிக்காவிடில் அவர்களுக்குப் புதிய கடன் வழங்கப்படாது. கடன் தள்ளுபடித் திட்டத்தின்படி, மதிப்பிடப்பட்ட 34,000 கோடி ரூபாயில் 4,000 கோடி ரூபாய் 8.4 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியான நேரம்தான் வேளாண் கடன் வழங்கலில் ஏற்பட்ட இடையூறுக்கான காரணம்” என்று மகாராஷ்டிர வங்கியின் அதிகாரி கூறுகிறார். விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தத் தொடங்கிய பிறகு ஜூன் மாதத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிட்டது. கடனுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஜூலை மாதத்தில் வெளியாகியது. கடனுக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு செப்டம்பர் மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

டிசம்பர் 2007ஆம் ஆண்டு வரையிலான விவசாயக் கடன்களை 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இந்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகியது. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு பல விவசாயிகள் புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்க இயன்றது. இதனால் 2009ஆம் ஆண்டின் காரிஃப் பருவத்தில் கடன் வழங்கலில் உயர்வு ஏற்பட்டது. “புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்க விவசாயிகளைத் தகுதியுடையவர்களாக மாற்றவே கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன” என்கிறார் மகாராஷ்டிர வங்கியின் அதிகாரி.

முக்கியத் துறைகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு நிலையான விகிதத்தை நிர்ணயிப்பதை அனைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. வங்கிகள் வழங்கும் கடன்களில் விவசாயத்துறைக்கு 18 சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன், உள்கட்டமைப்புக்கான கடன் மற்றும் விவசாயம் சார்ந்த செயல்பாடுகளுக்கான கடன் ஆகிய கடன்கள் இதில் அடங்கும்.

ஒவ்வொரு வங்கியும் தங்களின் பயிர் கடன் இலக்குக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்களை வெளியிடும். இந்தத் தகவல்களை மாநில அளவிலான வங்கியாளர்கள் சங்கத்திடம் ஒவ்வொரு வங்கியும் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல்களை வங்கியாளர்கள் சங்கம் பொதுப் பார்வைக்கு காட்சிப்படுத்தும்.

மகாராஷ்டிர வங்கியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் பயிர் கடன் வழங்கலில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் வங்கிகள் தங்களின் கடன் வழங்கல் இலக்கில் 26 சதவிகிதத்தை மட்டுமே எட்டியுள்ளன. மேற்கு மகாராஷ்டிராவில், ஆகஸ்ட் மாதத்துக்குள் வங்கிகள் தங்களின் கடன் வழங்கல் இலக்கில் 54 சதவிகிதத்தை எட்டிவிட்டன. மேற்கு மகாராஷ்டிராவில் கடன் தள்ளுபடி தொடர்பான போராட்டங்கள் மிகத் தீவிரமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயத் தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், “கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பு விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் வழங்க விருப்பம் காட்டுவதில்லை. கடன் சுழற்சியை உடைத்து, அதிலிருந்து லாபம் பெறும் வகையில் விவசாயக் கடன் திட்டங்களை அரசியல்வாதிகள் உருவாக்குகின்றனர்” என்கிறார். அதாவது, விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்களால் பணக்கார விவசாயிகள் மட்டுமே லாபம் அடைவதாக கிஷோர் திவாரி கூறுகிறார்.

கிஷோர் திவாரி மேலும் கூறுகையில், “இந்த ஆண்டில் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஆண்டின் காரிஃப் பருவம் வரை காத்திருக்கின்றனர். அவர்கள் ராபி பருவத்துக்கான கடனுக்கு விண்ணப்பிப்பதில்லை” என்கிறார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகள் பாதிப்படைந்திருந்தாலும்கூட, கூட்டுறவு வங்கிகள் அவற்றின் கடன் வழங்கல் இலக்கை எட்டிவிடும் அளவுக்கு நெருங்கிவிடுகின்றன.

இதே நிலை பஞ்சாபிலும் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்த பிறகு, அம்மாநிலத்தின் கடன் வழங்கல் மற்றும் கடன் திரும்பப்பெறுதலில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடன் தள்ளுபடிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டன.

ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பஞ்சாப் மாநில அளவிலான வங்கியாளர்கள் சங்கத்தின் கூட்டம் பேங்க் ஆஃப் பரோடாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டம் தொடர்பான குறிப்புகளின் பதிவில், “சட்டமன்றத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து ஓர் உறுதியளிப்பு வெளியானவுடன், விவசாயிகள் கடன் செலுத்தத் தவறுகின்றனர். இதன் விளைவாக பஞ்சாப் மாநில விவசாயிகள் பயிர்க் கடன் செலுத்தாமல் நிறுத்திவிடுகின்றனர். கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கையில் மற்ற விவசாயிகளும் கடன் செலுத்துவதில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனைத் திரும்பச் செலுத்துதலில் சரிவு ஏற்பட்டதால், கடன் வழங்கலிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 103 சதவிகிதமாக இருந்த கடன் வழங்கல் இலக்கு, 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 82 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

நன்றி: ஸ்க்ரால்

தமிழில்: அ.விக்னேஷ்

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon