மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

புதுச்சேரி சுதந்திர தினம்!

புதுச்சேரி சுதந்திர தினம்!

புதுச்சேரியில் இன்று (நவ.1) சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காந்தி திடலில் உள்ள கொடி கம்பத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

கடந்த 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும், பிரெஞ்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் சுதந்திரம் கிடைக்காமலேயே இருந்தது. அவற்றில் புதுச்சேரியும் ஒன்று.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தைவிட்டு பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறினர்.

இதை நினைவுகூரும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையும் அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு கொடி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 8.55 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடற்கரை சாலை காந்தி திடலுக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். அதன்பின்னர் காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக்கொள்கிறார்.

மேலும், புதுச்சேரி விடுதலைக்குப் போராடிய தியாகிகளையும் நாராயணசாமி கவுரவிக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதை மேடையில் இருந்தபடியே அவர் பார்வையிடுகிறார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

விழாவையொட்டி கடற்கரை சாலையில் இன்று காலை முதல் இரவு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுக் கூடுதல் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon