மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 5.69 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. வடமாநிலங்களில் போதிய மழை இல்லாததாலும், வறட்சியாலும் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தேயிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. எனினும், ஜூலை மாதத்தில் உற்பத்தி அதிகரித்து 1.55 லட்சம் டன் அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 1.67 லட்சம் டன் அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் உற்பத்தியான 1.58 லட்சம் டன் தேயிலையை விட 5.69 சதவிகிதம் கூடுதலாகும்.

ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியில், வடமாநிலங்களில் 1.48 லட்சம் டன் அளவிலும், தென்மாநிலங்களில் 19,820 டன் அளவிலும் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அஸ்ஸாமில் தேயிலை உற்பத்தி 89,080 டன்னிலிருந்து 98,790 டன்னாக அதிகரித்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி 47,690 டன்னிலிருந்து 46,290 டன்னாகக் குறைந்துள்ளது. இந்திய அளவில் சராசரியாக ஆண்டுக்கு 12 லட்சம் டன் தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon