மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

விஷ்ணுவர்தனன் ஆன பிட்டிதேவன்!

 விஷ்ணுவர்தனன் ஆன பிட்டிதேவன்!

மின்னம்பலம்

அடியேன் ராமானுஜ தாசன் ... என்று தனது அவையைக் கூட்டி ராமானுஜர் முன்னிலையிலே அறிவிக்கிறான் மன்னன் பிட்டிதேவன் என்கிற விடல தேவராயன்.

மன்னனே ராமானுஜ தாசன் ஆனபிறகு, அவனது அமைச்சர்கள், நிர்வாகிகள், மக்கள் என்ன செய்வார்கள்? அனைவரும் கூடி ‘அடியேன் ராமானுஜ தாசன்’ என்று விண்ணதிர குரல் எழுப்பினார்கள்.

ராமானுஜர் தொண்டனூர் நம்பியை பெருமிதமாகப் பார்த்தார். தொண்டனூர் நம்பிக்கும் மிகப் பெரிய திருப்தி.

பிட்டிதேவன் தன் மனைவி, மகளுடன் ராமானுஜரது திருவடிகளில் விழுந்தான். பின்பற்றும் கொள்கையை மாற்றினால் பெயரை மாற்றுவதுதானே முறை. இந்த வகையில் ராமானுஜர் இதுவரை எத்தனையோ பேரின் பெயர்களை மாற்றி அவர்களை வைணவர்கள் ஆக்கியிருக்கிறார்.

தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யாதவ பிரகாசருக்கு கோவிந்த பட்டர் என்று வைணவப் பெயர் சூட்டினார் ராமானுஜர். தன்னை எதிர்த்து வாதிட்ட யக்ஞ மூர்த்தியை பேரருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று பெயர் சூட்டி வைணவர் ஆக்கினார். இப்படி ராமானுஜரது வரலாற்றில் எத்தனையோ பெயர்கள் மாற்றப்பட்டு வைணவத்துக்குள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் இப்போது சேர்ந்திருப்பதோ ஒரு மன்னன். சமண மதத்தைச் சேர்ந்த மன்னன். சமணத்துக்கும் வைணவத்துக்கும் அக்காலத்தில் பலத்த முரண்பாடுகள் உண்டு. சமணர்கள் தங்கள் கொள்கைகளில் இருந்து மாற்றுக் கருத்துக்குச் செல்பவர்களை கடுமையாக எதிர்ப்பார்கள்.

இந்த நிலையில், ராமானுஜர் பிட்டிதேவனின் பெயர் இனி விஷ்ணுவர்தனன் என்று சூட்டினார். மன்னர் பிட்டிதேவன் அந்த நொடி முதல் விஷ்ணுவர்தனன் ஆனான். ஒரு சாதாரண மனிதன் மாற்றுக் கொள்கையில் இருந்து வைணவத்துக்குத் திரும்பினால் அவன் மட்டும்தான் திரும்புவான். அல்லது அவன் குடும்பத்தினர் திரும்புவார்கள். ஒரு சமய குரு வேறொரு சமயத்தில் இருந்து வைணவத்துக்குத் திரும்பினால் அவரோடு அவரது அடியார்களும் திரும்புவார்கள்.

ஆனால் ஒரு மன்னனே சமணத்தில் இருந்து வைணவத்துக்குத் திரும்பிவிட்டால்? இதை நினைத்துப் பார்க்கவே சமண குருமார்களின் நெஞ்சு கொதித்தது. ஏற்கனவே அவர்கள் ராமானுஜரைப் பற்றி கேள்விப்பட்டவர்கள். ராமானுஜரால் ஒரு சமண சாம்ராஜ்யமே வைணவ சாம்ராஜ்யமாக மாறிவிட்டது என்பதை சமண குருமார்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மன்னர் பிட்டிதேவனுக்கு விஷ்ணுவர்தனன் என்று பெயர் சூட்டிய ராமானுஜர், அவனுக்கு வைணவத்துக்கு உரிய பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் சடங்குகளையும் செய்வித்தார். குறிப்பாக சமாஸ்ரயனம் எனப்படும் இரண்டு தோள் பட்டைகளிலும் சங்கு சக்கரத்தை பதிக்கும் சடங்கையும் அனைவர் முன்னிலையிலும் செய்வித்தார்.

ப ல வெற்றிகளை சுவைத்த அந்த ஹொய்சாள மன்னனின் தோள்பட்டைகளில் சங்கும் சக்கரமும் பதிக்கப்பட்ட தகவல் அறிந்து சமண குருமார்கள் கொந்தளித்தனர்.

வைணவன் ஆன மன்னர் விஷ்ணுவர்தன் ராமானுஜரிடம், ‘தாங்கள், என் மகளை குணப்படுத்தியதால் மட்டுமே தான் வைணவன் ஆனேன் என்று நினைத்திட வேண்டாம். தங்களைப் பற்றி முழுதாக அறிந்துகொண்டிருந்தேன் என்றால் நான் அந்த சம்பவம் நடக்காமல் இருந்தாலும் தங்களது சிஷ்யன் ஆகியிருப்பேன். இனி எனது ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, அனைத்துக்குமே தாங்களே என் குரு’’ என்று ராமானுஜரது திருவடிகளில் விழுந்தான்.

மேலும், ’‘குருவே நான் வைணவன் ஆனதை இந்த வரலாறு பதிவு செய்ய வேண்டும். அதற்காக என் ராஜ்ஜியத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க வைணவத் திருக்கோயில்களை கட்ட முடிவு செய்துள்ளேன்’’ என்று மன்னர் விஷ்ணுவர்தனன் அறிவிக்க... அகம் மகிழ்ந்து, அரசவைக்கு எப்படி போனாரோ அதே வித எளிமையோடு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டார் ராமானுஜர்.

பிட்டிதேவன் விஷ்ணுவர்தனன் ஆன தகவல் பரவியதும்... அவனது சமண குருமார்கள் ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஆலோசித்தனர்.

‘ராமானுஜர்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அவர்தான் சமணத்தை தொடர்ந்து பலவீனம் ஆக்கி வருகிறார். நாம் அனைவரும் எல்லாரும் சேர்ந்து ராமானுஜரோடு மோதுவோம்!’’ என்று சிலர் யோசனை தெரிவிக்க... அதை அனைத்து சமண குருமார்களும் ஏற்றுக் கொண்டனர்.

பிட்டிதேவனின் ராஜகுருவாக இருந்த சமண குருவின் சீடர்கள் உள்பட பன்னிரெண்டாயிரம் சமணர்கள் ராமானுஜரை எதிர்த்து அணி திரண்டதாக குருபரம்பரைக் குறிப்புகள் சொல்கின்றன.

மன்னரை வைணவராக மாற்றிய திருப்தியோடு தொண்டனூரில் ஒரு மடம் அமைத்து சிஷ்யர்களுக்கு வேதாந்த கருத்துகளை உபதேசித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் தொண்டனுரை சமண குருமார்கள் நெருங்கினர்.

என்ன ஆயிற்று?

வைணவத்தின் தமிழ் சுரங்கத்தை தோண்டி.. அதை பாமரரும் அறியும் வகையிலே பாசுர நதிகளாக ஓட விட்டு... வைணவத்தின் ஈரத்தில் தமிழையும், தமிழின் ஈரத்தில் வைணவத்தையும் தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய அதிபதி ஜெகத்ரட்சகன்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon