மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: பஞ்சாயத்து பழனிசாமி

டிஜிட்டல் திண்ணை:  பஞ்சாயத்து பழனிசாமி

வெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் மழை செய்திகளைக் கொட்டித் தீர்த்தது.

“முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு மாதம் மும்மாரி பொழிகிறது என்பதுதான் அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருவது. ஆனால், இப்போது சென்னையில் வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பது போன்ற அடைமழையை முதல்வராக எடப்பாடி இப்போதுதான் பார்க்கிறார். இது அவருக்குப் பெருமை என்பதை விட சவாலாக மாறி இருக்கிறது.

நேற்றைய மழைக்குப் பிறகு அதிகாரிகளிடமும் அமைச்சர்கள் சிலரிடமும் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது, ‘அம்மா இருந்த சமயத்தில் சென்னையில் பெரு வெள்ளம் வந்துச்சு. அதை அம்மா சிறப்பாக எதிர்கொண்டார்கள். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார்கள். இப்போது அந்த அளவு இல்லை என்றாலும் மழையால் மக்கள் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் அதை நாம் சரியாக எதிர்கொண்டு ஆக வேண்டும். அதற்கு உங்க எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும். அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர்தான் இந்த நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத் துறை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஏற்கெனவே டெங்கு பிரச்னையில் மக்கள் அரசாங்கத்தைக் குறை சொல்லிட்டு இருக்காங்க.

இப்போ கொசு இன்னும் அதிகமாகும். அதை எப்படி சமாளிக்கப் போறோம்னு யோசிக்கணும். அதைத் தடுக்கணும். அதில் உங்களோட பங்களிப்பு அவசியம் தேவை’ என்று எடப்பாடி பேசிக் கொண்டிருக்கும்போதே, அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொசு பெருகாமல் தடுக்கும் பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல, உள்ளாட்சித் துறைக்கும் இருக்கு. அவங்க பங்களிப்புதான் அதிகம். அதனால், அவங்களையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்க...’ என நேரடியாகவே சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் வேலுமணியும் எழுந்து பேசியிருக்கிறார். ‘நாங்களும் உள்ளாட்சித் துறையின் மூலமாக எல்லா இடங்களிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறோம்...’ எனச் சொன்னாராம். இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ‘நீங்க எல்லோருமே சரியாதான் செஞ்சுட்டு இருக்கீங்க.. அதை இன்னும் எப்படி சரியாக செய்யணும்னு யோசிங்க... நாம ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதால் எதுவும் நடக்காது..’ எனச் சொன்னாராம் எடப்பாடி.

பிறகு, முதல்வரைத் தனியாகப் பார்த்துப் பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர். ‘இங்கே செய்யுறது எல்லாமே நாங்கதான். செய்யாமல் இருப்பது உள்ளாட்சித் துறை. ஆனால், அவங்கதான் எல்லாம் செய்யுற மாதிரி காட்டிக்கிறாங்க. இங்கே பேச்சு வாங்குறது நாங்களா இருக்கோம். அவங்ககூட சேர்ந்து எங்களால எதுவும் செய்ய முடியாது. நாங்க எங்க வேலையை பார்க்கிறோம். அவங்களை அவங்க வேலையை பார்க்கச் சொல்லுங்க..’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

அதன் பிறகு வேலுமணியும் முதல்வரைப் பார்த்திருக்கிறார். ‘உள்ளாட்சித் துறை ஏதோ எதுவுமே செய்யாதது போல, விஜயபாஸ்கர் பேசிட்டு போறாரு. நாங்க என்ன வேலை செஞ்சுட்டு இருக்கோம்னு உங்களுக்கு தெரியும். அவரோடு போய் நாங்க ரோட்டுல இறங்க முடியாது. நானும் ஜெயகுமார் அண்ணனும் எல்லா இடத்துக்கும் போய்க்குறோம். இதை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். சொன்னபடியே வேலுமணியும், விஜயபாஸ்கரும் தனித்தனியாகத்தான் களத்துக்குப் போனார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜ் வந்தது.

“அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இருக்கிறார். மீடியாவுக்குப் பேச வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொடுக்கும் நண்பர் அவர்தான். அவர் சொன்ன தகவல்களுடன் இன்று மீடியாவைப் பார்த்த அமைச்சர் வேலுமணி, ‘சென்னையில் மட்டுமல்ல... அமெரிக்கா, லண்டன் என வளர்ந்த நாடுகளில்கூட மழை வந்தால் தண்ணீர் தேங்கி நிற்குது. இங்கே நிற்காதா...’ என்று கேள்வி கேட்டார். அமைச்சர் பேச்சை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான அமைச்சர், தனது நண்பரை அழைத்து, ‘உதாரணம் சொல்றதெல்லாம் உள்ளூரோடு நிறுத்திக்கோ.. உன் பேச்சை கேட்டுட்டு நான் பேசினேன் பாரு... இப்போ எல்லாம் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க...’ என்று கடிந்துகொண்டாராம். ‘நான் உங்களுக்குத் தெரிஞ்சுக்கணும்னு சொன்னேன். அதை நீங்க எதுக்கு மீடியாவுக்கு சொன்னீங்க...’ எனத் திருப்பிக் கேட்டிருக்கிறார் அந்த நண்பர். ‘நாம எப்போ சறுக்குவோம்னு ஒரு ஆள் பார்த்துட்டே இருக்காரு... கவனமாக இருக்கணும். அதனால இனி குறிப்பெடுக்கும் போது கவனமாக எடுங்க...’ என்று நண்பருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.” என்று முடிந்தது அடுத்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு,

“அமைச்சர்கள் வேலுமணிக்கும் விஜயபாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது தெரிந்ததுதான். அதை மழையோடு போராடும் மக்கள் விஷயத்திலும் காட்ட வேண்டுமா?” என்று கமெண்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 31 அக் 2017

அடுத்ததுchevronRight icon