மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 19 பிப் 2020

அமலா பாலைத் தொடர்ந்து சிக்கும் பிரபலங்கள்!

அமலா பாலைத் தொடர்ந்து சிக்கும் பிரபலங்கள்!

போலியான முகவரி கொடுத்து விலையுயர்ந்த காரை வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இதே போன்று வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நடிகை அமலா பால் கார் வாங்கிய விவகாரத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிக்கக் கோரி அமலா பாலுக்கு எர்ணாகுளம் ஆர்டிஓ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், “அமலா பால் எவ்வித விதிமீறலும் ஈடுபடவில்லை” என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி இன்று (அக்டோபர் 31) தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.70 லட்சம் மதிப்பிலான இ கிளாஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். இவரும் தனது காரை புதுச்சேரியில் பதிவுசெய்துள்ளார். அங்கே, எண் 16, இரண்டாவது குறுக்குத் தெரு, புதுப்பேட்டை, லாஸ்பேட்டை, புதுச்சேரி என்ற முகவரியில் பதிவுசெய்துள்ளார்.

ஃபகத் ஃபாசிலின் கார், ஆவணங்களில் பதிவுசெய்துள்ள முகவரியில் வேறொருவர் வசித்துவருவது தற்போது தெரியவந்துள்ளது. இந்த காரை கேரள மாநிலத்தில் பதிவுசெய்திருந்தால், 14 லட்சம் வரி கட்ட வேண்டும். ஆனால், பாண்டிச்சேரியில் 1.5 லட்சம் மட்டுமே வரியாகக் கட்ட வேண்டும். இது குறித்துத் தற்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். இதேபோன்று கேரளா மாநிலம் கொடுவல்லி நகராட்சி கவுன்சிலர் காரத் ஃபைசலும் மினி கூப்பர் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேரளாவில் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் வைத்திருப்பவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது குறித்து அம்மாநிலப் போக்குவரத்து ஆணையர் அணில் கந்த், “பிரபலங்கள் வாங்கியுள்ள அனைத்து கார்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த விசாரணையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் எவராயினும் நோட்டீஸ் அனுப்பப்படும். இவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon