காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
காமன் வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றுவருகின்றன. இன்று (அக்டோபர் 31) நடைபெற்ற 10m `ஏர் ரைஃபில்' பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து 240.8 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எலீனா கலியாபோவிச் 238.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஹீனா, சர்வதேசப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தீபக் குமார் வெண்கலப் பதக்கமும், ககன் நரங் நான்காவது இடத்தையும், ரவிக்குமார் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் ககன் நரங் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்ற வாரம் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 10m `ஏர் ரைஃபில்' கலப்பு இரட்டையர் பிரிவில் சிந்து, சித்து ராயுடன் இணைந்து தங்கம் வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.