மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

தொழில் தொடங்குதலில் முன்னேறும் இந்தியா!

தொழில் தொடங்குதலில் முன்னேறும் இந்தியா!

மின்னம்பலம்

சர்வதேச அளவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சம் கொண்ட நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி நூறாவது இடத்தைப் பிடிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் உலகின் 190 நாடுகளில் தொழில் தொடங்கும் அம்சத்தைக் கொண்ட பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2017ஆம் ஆண்டில் எளிதாகத் தொழில் தொடங்கும் நடவடிக்கையில் இந்தியா 131ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் இந்தியா முன்னேறும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது, தொழில் நிறுவனங்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவது மற்றும் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்குவது போன்ற பல்வேறு அம்சங்களால் இந்தியா இப்பட்டியலில் மேம்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நூறாவது இடத்துக்கு முன்னேறும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது, கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்குவது மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா கடந்த ஆண்டில் முறையே 155, 185, 136 ஆகிய இடங்களில் இருந்தது. எனினும், இந்த ஆண்டில் தரவரிசையில் இந்தியா மேம்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டில் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்க நிலையை அடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பட்டியலில் இந்தியா 50ஆவது இடத்தை அடைவதற்கான இலக்குடன் செயல்பட்டுவருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon