மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

சிபில்: கல்விக் கடனுக்கு விலக்கு கிடையாது!

சிபில்: கல்விக் கடனுக்கு விலக்கு கிடையாது!

இந்தியாவில் கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக சிபில் என்ற Credit Information Bureau அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களைக் கடன் வழங்கிய வங்கிகள் சிபில் அமைப்புக்குத் தெரிவிக்கும்.

இந்தத் தகவல்களை சிபில் அமைப்பு சேமித்து வைக்கும். கடனைத் திருப்பிச் செலுத்துவதன் அடிப்படையில் சிபில் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனடியாகக் கடன் கிடைக்கும். குறைவாக இருந்தால் கடன் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும்.

இந்நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் விவரங்கள் சிபில் பட்டியலில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்காலத்தில் வேறு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், கல்விக்கடனை சிபில் பிரிவில் சேர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, சுய தொழில் தொடங்க விரும்புவோருக்குக் கடன் கிடைக்காத நிலையும் ஏற்படுவதாகக் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். வங்கியின் மொத்த வாரக்கடனில் கல்விக் கடன் வெறும் 6.9 சதவிகிதம் என்றும், உருக்கு போன்ற தொழில் துறையில் இது 36.4 சதவிகிதம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், ‘சிபில் பிரிவிலிருந்து கல்விக் கடனுக்கு விலக்கு அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது’ எனத் தனது பதில் கடிதத்தில் மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் கல்விக் கடன் அதிகமுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon