காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு பெருமளவில் அதிகரித்துள்ளது. மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு அதிகரித்துள்ளது என உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் 2015ஆம் ஆண்டு 400 பாகங்களாக இருந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு 2016ஆம் ஆண்டு 403.3 பாகங்களாக அதிகரித்துள்ளது. இது மனிதர்களின் செயல்கள் மற்றும் வலுவான எல்நினோ நிகழ்வுகள் போன்றவற்றால் அதிகரித்துள்ளது.
1750ஆம் ஆண்டு முதல் தொழிற்துறை வளர்ச்சி ஆரம்பித்தது முதல் வளி மண்டலத்தில் ஆபத்தான வாயுக்களின் உள்ளடக்கத்தை ஐ.நா. வானிலை வாரியம் கண்காணித்துவருகிறது. கிரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்களில் பனிக்கட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் காற்றுக் குமிழ்களைப் பயன்படுத்தி 8,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றில் இருந்த வாயுக்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு தற்போது உள்ள நிலை போன்று, மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அப்போது கடல் மட்டமானது, தற்போது உள்ளதைவிட 20 மீட்டர் உயரமாக இருந்திருக்கலாம் எனவும், வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில், கார்பன் டை ஆக்சைடின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவுகளைக் கட்டுப்படுத்தவில்லையெனில், இந்த நுற்றாண்டில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய இரண்டு முக்கிய வாயுக்களும் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளன. இருப்பினும் கார்பன் டை ஆக்சைடை விடக் குறைவான அளவே அதிகரித்துள்ளது.