கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பெரம்பூரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரம்பூர் பாரதி சாலையில், மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் கால தாமதமாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருப்பு இருப்பதாகக் கூறிப் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பல்வேறு குளறுபடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. குளறுபடிகளைச் சரி செய்யப் பொதுமக்கள் பலமுறை மண்டல அதிகாரியிடம் மனு கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தக் புகார்களுடன் சர்க்கரை விலை ஏற்றத்தைக் கண்டித்தும் மாதர் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்கள் நேற்று (அக்டோபர் 30) காலை பெரம்பூர் மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
“ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றத்தைத் திரும்பப்பெற வேண்டும். இதுபோல் ஸ்மார்ட் கார்டில் உள்ள குளறுபடிகளையும் சரிசெய்ய வேண்டும்” என மாதர் சங்கத்தினர் கூறினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.