மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ராகுலை சந்திக்கும் ஹர்திக் பட்டேல்

ராகுலை சந்திக்கும் ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பட்டேல் சமூகத்தினர் முன் வைத்த 5 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை குஜராத் வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பட்டேல் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் பட்டேல் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.

பட்டிடார் அனமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பை நடத்திவரும் ஹர்திக் பட்டேலின் பிரதிநிதிகள் இன்று அக்டோபர் 31 காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் காங்கிரசிடம் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு நடந்த பட்டேல் இன மக்களின் போராட்டத்தின்போது தேச துரோகம் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சித்தார்த் பட்டேல்,

‘’காங்கிரசின் ஆட்சி அமைந்ததும் பட்டேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் வாபஸ் வாங்கப்படும், போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 35 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். முக்கிய கோரிக்கையான பட்டேல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு பற்றி இன்னும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு அரசியல் தீர்வு எட்டப்படும். ஹர்திக் பட்டேலின் கோரிக்கைகளில் 5-ல் 4 உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது’’ என்றார்.

இந்நிலையில் நாளை நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்கிறார். ராகுலை ஹர்திக் பட்டேல் சந்திப்பார் என்றும், காங்கிரஸுகு பட்டிடார் அனமத் அந்தோலன் சமிதியின் ஆதரவு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon