மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 ஜன 2020

இமாச்சல்: முதல்வர் வேட்பாளரை அறிவித்த பாஜக!

இமாச்சல்: முதல்வர் வேட்பாளரை அறிவித்த பாஜக!

வரும் நவம்பர் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் இமாசலப் பிரதேசத்தில் பாஜக தனது முதல்வர் வேட்பாளராக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலை முன்னிறுத்தியுள்ளது. இன்று (அக்டோபர் 31) இமாச்சல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா இதை அறிவித்தார்.

இமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நட்டா பாஜக தேசிய இளைஞரணியின் தலைவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று இரவு சிம்லாவில் கூடிய கட்சியின் உயர் மட்டக் குழுவில் நட்டா ஆதரவாளர்களும், துமால் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துமாலுக்கு 73 வயது ஆகிறது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை விட இளைஞரணியின் தேசியத் தலைவராக உள்ள இளைஞரான நட்டாவை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், துமாலுக்கு மாநிலத்தின் பெரும்பான்மை பாஜக நிர்வாகிகள் ஆதரவு அளித்தனர்.

துமாலை அறிவிக்காமல் நட்டாவை அறிவித்தால் மாநிலத்திலுள்ள நிர்வாகிகளின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் துமாலையே முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜக தலைமை. ஏற்கனவே இருமுறை முதல்வராக பதவி வகித்த துமால் மக்களிடையே நன்கு அறிமுகமானவர்.

“துமால் இன்று முன்னாள் முதல்வர். டிசம்பர் 18 அன்று முதல்வர்” என்று அறிவித்திருக்கிறார் அமித் ஷா.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon